

மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்த 6 தொகுதிகளுக்கான சட்டமேலவைத் தேர்தலில் 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளைக் கொண்ட மகா கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், அம்மாநில சட்டமேலவையில் பிருஹன் மும்பை நகராட்சிக்குட்பட்ட 2 தொகுதிகள், கோகல்பூர், நந்தூர்பார் துலே, நாக்பூர், அகோலா புல்தானா வாசிம் ஆகிய 6 தொகுதிகளுக்கான எம்எல்சிக்கள் அண்மையில் ஓய்வு பெற்றனர். இதையடுத்து, அந்த தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.
இதில், பிருஹன்மும்பை நகராட்சிக்கு உட்பட்ட 2 தொகுதிகளில் சிவசேனாவும், பாஜகவும் தலா ஒரு இடத்தை போட்டியில்லாமல் கைப்பற்றின. இதேபோல, கோகல்பூர் மற்றும் நந்தூர்பார் துலே தொகுதிகளை முறையே காங்கிரஸும், பாஜகவும் போட்டியில்லாமல் கைப்பற்றின.
இந்நிலையில், நாக்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சந்திரசேகர் பவான்குலேவும் அகோலா புல்தானா வாசிம் தொகுதியில் பாஜகவின் வசந்த் கண்டேல்வாலும் வெற்றி பெற் றனர். இதன் மூலம் 6-ல் 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, “தாங்கள் இணைந்து போட்டியிட்டு மாநிலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம் என சிவசேனா தலைமையிலான மகா கூட்டணிக் கட்சிகள் இதுவரை கூறி வந்தன. ஆனால், இந்தக் கூற்றினை பாஜக தற்போது உடைத்திருக்கிறது. பாஜகவின் இந்த வெற்றியானது இனி நாங்கள் பெறவுள்ள வெற்றிகளுக்கு அடித்தளமாக இருக்கும்” என்றார்.
- பிடிஐ