விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வங்கிகள் வழக்கு

விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வங்கிகள் வழக்கு
Updated on
1 min read

வங்கிகளில் வாங்கிய கோடிக்கணக்கான கடன் தொகையை திருப்பி செலுத்தாத விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வழிகாட்டுதல் கோரி, எஸ்.பி.ஐ. தலைமையிலான பொதுத்துறை வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த மனு நாளை (புதன்) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தொடர்பாக 17 பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பு ரூ.6,963 கோடி கடன் தொகையை மல்லையா குழுமத்திடமிருந்து வசூலிக்க போராடி வருகின்றன.

கடந்த மாதம் பொதுத்துறை வங்கிகள் கூட்டமைப்பு விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கவும் அவரைக் கைது செய்யவும் கடன் மீட்பு ஆணையத்திடம் முறையீடு செய்தது.

மேலும் கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் வரை டியாகோ நிறுவனத்திடமிருந்து விஜய் மல்லையாவுக்கு கைமாறும் தொகையை நிபந்தனை ஒப்பந்தத்தில் வைக்குமாறு கோரியிருந்தது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் எஸ்பிஐ வங்கிக்கு ரூ.1,600 கோடி அளிக்க வேண்டும். பஞ்சாப் நேஷனல் மற்றும் ஐடிபிஐ வங்கிகள் தலா ரூ.800 கோடி கடன் அளித்துள்ளது. பேங்க் ஆஃப் இந்தியா ரூ.650 கோடியும், பேங்க் ஆஃப் பரோடா ரூ.550 கோடியும், செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.410 கோடியும் கிங்பிஷர் ஏர்லைன்ஸிடமிருந்து வசூலிக்க போராடி வருகின்றன.

யூகோ வங்கி ரூ.320 கோடி, கார்ப்பரேஷன் வங்கி ரூ.310 கோடி, மைசூரு ஸ்டேட் வங்கி ரூ.150 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.140 கோடி, பெடரல் வங்கி ரூ.90 கோடி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி ரூ.60 கோடி, மற்றும் ஆக்சிஸ் வங்கி ரூ.50 கோடி என்று கடன் தொகையை வசூலிக்க முடியாமல் தத்தளித்து வருகின்றன.

வாராக்கடன் விவகாரத்தில் மத்திய ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகளுக்கு காலக்கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in