

மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மரபணு மாற்றப்பட்ட பயிர் பி.டி.பருத்தி என மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறியுள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதியின் எம்.பி. கதிர் ஆனந்த் எழுப்பியக் கேள்வியில், ’பருப்பு வகைகள், உணவு தானியங்கள், பருத்தி மற்றும் பிற வேளாண் பொருட்கள் உட்பட பல்வேறு பயிர்களின் மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதா?
நாட்டிலுள்ள உள்நாட்டு ரக உணவு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் இதர வேளாண் விளை பொருட்கள் உற்பத்தி வளர்ச்சியை உறுதி செய்வதற்காக மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பயிரிடும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு எடுத்த சீரிய நடவடிக்கைகள் என்ன?’ எனக் கேட்டிருந்தார்
இக்கேள்விக்கு மக்களவையில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுத்துபூர்வமாக இன்று அளித்த பதிலில் கூறியதாவது:.
2002 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மரபணு மாற்றப்பட்ட பயிர் பி.டி.பருத்தி ஆகும்.
நாட்டிலுள்ள உள்நாட்டு ரக உணவு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பிற வேளாண் விளைபொருட்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை உறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்காக, தானியங்கள், தினை, பருப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களின் உயர் விளைச்சல் மற்றும் தாங்கும் சக்தி கொண்ட வகைகளை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்குகிறது.
அதே போல் வெவ்வேறு வேளாண் காலநிலை நிலைக்கு ஏற்ற எண்ணெய் வித்துக்கள் மற்றும் பழங்கள் உருவாக்கப்படுகின்றன. கடந்த ஏழு ஆண்டுகளில், 1656 மேம்படுத்தப்பட்ட ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 798 தானியங்கள், 252 எண்ணெய் வித்துக்கள், 250 பருப்பு வகைகள், 189 நார் பயிர்கள், 104 தீவன பயிர்கள், 54 கரும்பு வகைகள் மற்றும் 10 பயன்பாட்டுக்கு வாரா பயிர்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் பனை மற்றும் ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா ஆகிய திட்டங்களின் கீழ் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான உதவி/ விதைகள் மற்றும் நடவுப் பொருட்கள் ஆகியவை மானியமாக வழங்குகிறது.
இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்தார்.