கரீனா கபூர் உள்பட 12 பாலிவுட் பிரபலங்களுக்கு கரோனா: கரண் ஜோஹர் பார்ட்டியால் பரவியதா?

கரீனா கபூர் உள்பட 12 பாலிவுட் பிரபலங்களுக்கு கரோனா: கரண் ஜோஹர் பார்ட்டியால் பரவியதா?
Updated on
1 min read

பாலிவுட் பிரபலமான கரீனா கபூர் உள்பட 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அண்மையில் பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் இல்லத்தில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்ட சிலருக்கே இந்தத் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பார்ட்டி நடந்த வீட்டிற்கு மும்பை மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

இந்நிலையில், கரீனா கபூர் தரப்பில் தொற்று பரவல் குறித்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "கடந்த டிசம்பர் 8 ஆம் தேதியன்று கரண் ஜோஹரின் மும்பை இல்லத்தில் இரவு உணவு விருந்து நடந்துள்ளது. இதில் கரீனா கபூர், அம்ரிதா அரோரா, தி ஃபேபுலஸ் லைவ்ஸ் ஆஃப் பாலிவுட் வைவ்ஸ் படத்தில் நடித்த சீமா கான், மஹீப் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் மேலே கூறிய 4 பேர் உள்பட 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கரண் ஜோஹர் இல்லத்தில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட ஒருவர் உடல்நலம் சரியில்லாமல் இருமிக் கொண்டிருந்தார். அவர் மூலமாகவே தொற்று பரவியிருக்க வேண்டும். உடல்நலன் சரியில்லை என்றால் அந்த நபர் விழாவில் கலந்து கொள்ளாமல் பொறுப்புடன் தவிர்த்திருக்கலாம்.

முதலில் சீமா கானுக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து கரீனாவும், அம்ரிதாவும் சோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா ஊரடங்கு காலம் தொட்டே கரீனா கபூர் பொறுப்புள்ள நபராக நடந்து கொண்டு வருகிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த முறை அவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் கலந்து கொண்ட பார்ட்டியும் மிகச் சிறிய எண்ணிக்கையிலான நபர்கள் கலந்து கொண்டதே" எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கரண் ஜோஹர் வீட்டு பார்ட்டியில் கலந்து கொண்ட சிலர் அடுத்த சில நாட்களில் அனில் கபூர் இளைய மகள் ரியா கபூர் நடத்திய பார்ட்டியிலும் கலந்து கொண்டுள்ளனர். கரிஷ்மா கபூர், மசாப் கான், மலாய்கா அரோரா ஆகியோர் அந்தப் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் பாலிவுட் வட்டாரத்தில் கரோனா பரவல் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் ஒமைக்ரான் தொற்று அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in