Last Updated : 14 Dec, 2021 04:54 PM

Published : 14 Dec 2021 04:54 PM
Last Updated : 14 Dec 2021 04:54 PM

இளைஞர்களின் புதிய யோசனைகளில் சமூக பாகுபாடு இருக்காது: கிறிஸ்தவப் பெண்ணை மணமுடித்த தேஜஸ்வீ கருத்து

புதுடெல்லி: கிறித்தவப் பெண்ணை காதலித்து மணமுடித்த தேஜஸ்வீ பிரசாத் யாதவ் இன்று பாட்னா வந்திறங்கினார். இதன் மீதான கேள்விக்கு அவர் இளைஞர்களின் புதிய யோசனைகளில் எந்த சமூகம் மீதும் பாகுபாடு இருக்காது எனப் பதிலளித்துள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் நிறுவனரான லாலு பிரசாத் யாதவ், கடந்த வாரம் 8 ஆம் தேதி திடீர் என டெல்லி வந்திறங்கினார். அவருடன் பிஹாரின் முன்னாள் முதல்வரும் மனைவியுமான ராப்ரி தேவி, மாநிலங்களவை எம்.பி.யான மிசா பாரதி உள்ளிட்டக் குடும்பத்தாரும் வந்திருந்தனர்.

இதன் மறுநாள் லாலுவின் இளைய மகனான தேஜஸ்வீக்கு திருமணம் நடத்தப்பட்டது. மிக நெருக்கமான உறவினர்களும், நண்பர்களும் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

இதன் மீதான தகவல் எந்த செய்தியாளர்களுக்கும் அளிக்கப்படாமல் ரகசியமாகவே இருந்தது. இதன் பின்னணியில் தேஜஸ்வீ மணந்த பெண்ணான ரேச்சல் ஒரு கிறித்துவர் எனக் காரணமாகக் கருதப்பட்டது.

பிஹாரில் அதிகமுள்ள தனது யாதவர் சமுதாயத்தின் அடிப்படையில் அரசியல் செய்து வருபவர் லாலு. இவரது மகன் மாற்று மதப்பெண்ணை மணமுடிப்பதன் தாக்கம் அவரது அரசியல் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் என்றும் அஞ்சப்படுவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தேஜஸ்வீ தனது மணப்பெண்ணுடன் இன்று காலை பியாரின் பாட்னா விமானநிலையம் வந்திறங்கினார். அவரை சூழ்ந்த செய்தியாளர்கள் தேஜஸ்வீ கிறித்தவப் பெண்ணை மணமுடித்தது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த லாலுவின் மகன் தேஜஸ்வீ கூறும்போது, ‘‘லோகியாவின் கொள்கைகளை பின்பற்றும் என் போன்ற இளைஞர்களின் புதிய யோசனைகளில் எந்த சமூகத்தினர் மீது பாகுபாடுகள் இருக்காது.’’ எனத் தெரிவித்துள்ளார்.

பிஹாரை சேர்ந்த ராம் மனோகர் லோகியா சமூக சீர்திருத்தவாதியாகக் கருதப்படும் தலைவர். இவரது முற்போக்கு கொள்கைகளை தன் அடிப்படையாக வைத்து லாலு புதிய கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் துவக்கி பிஹாரில் ஆட்சி அமைத்தவர்.

யாதவர் அல்லாதவரை மணமுடித்தமைக்காக தனது தாய் மாமன் சாது யாதவ் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு தேஜஸ்வீ, ‘‘அவர் அதீதக் கற்பனையில் கருத்து கூறியுள்ளார். அவர் மீது எனக்கு இன்னும் மதிப்பு இருப்பதால் நான் தனிப்பட்ட முறையில் மாமாவின் மதிப்பு குறையும்படி கருத்து கூற விரும்பவில்லை.’’ எனப் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து பிஹாரின் ரகோபூர் தொகுதியின் எம்எல்ஏவுமான தேஜஸ்வீ கூறும்போது, ‘‘திருமணத்திற்கு முன்பாக எனது மணப்பெண் பெயர் ரேச்சல் கோதினோ என்றிருந்தது. இது பிஹார்வாசிகள் உச்சரிப்பதில் சங்கடங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக அது, ராஜ்ஸ்ரீ என மாற்றப்பட்டுள்ளது.

இப்பெயரை எனது தந்தை (லாலு) பரிந்துரைத்திருந்தார். எங்கள் குடும்பத்தினருக்கு கரோனா பரவலில் நேரமின்மை காரணமாக அனைவரையும் அழைத்து விமரிசையாக திருமணம் நடத்தவில்லை.

எனவே, இனி பொறுமையாக ஏற்பாடுகள் செய்து பாட்னாவில் வரவேற்பு நிகழ்ச்சி செய்யும் நடத்தும் யோசனையில் உள்ளேன். இதற்கான இடத்தை தேர்வு செய்த பின் தேதியை அறிவிப்போம்.’’ எனத் தெரிவித்தார்.

கிறித்தவப்பெண்ணை மணந்த பாஜக தலைவர்

பிஹாரின் இளம் எதிர்கட்சித் தலைவராகவும் இருக்கும் தேஜஸ்வீயை போன்ற அரசியல்வாதிகள் மாற்று மதத்தினரை மணமுடிப்பது புதிதல்ல. பிஹாரிலேயே துணை முதல்வர் பதவி வகித்த பாஜவின் சுசில் குமார் மோடி, 1980 களில் ஒரு கிறித்தவப் பெண்னை மணமுடித்தவர்.

சுசில் குமார் மோடி

அப்போது எந்த ஒரு பதவியிலும் இல்லாத சுசில் மோடி 1990 இல் தான் முதன்முறையாக எம்எல்ஏவானார். தனது மதமாற்றத்தை திருமணத்தை அரசியல் வாழ்வில் கலக்காத சுசில் மோடி, சிறுபான்மையினர் மீது தனிகவனம் வைத்திருந்ததாகப் பாராட்டப்படுவது உண்டு.

தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவியில் பாஜக எம்.பி.யாக இருப்பவர், பாட்னாவில் வருடந்தோறும் ரம்ஜான் மாதங்களில் இப்தார் விருந்தை அளிப்பவர் எனவும் தகவல்கள் உள்ளன. எனவே, தன் மகன் திருமண விவகாரத்தில் லாலுவின் அச்சம் அநாவசியமானது எனவும் கருத்துக்கள் நிலவுகின்றன.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x