

வாரணாசியில் நேற்று பிரதமர் மோடி கங்கையில் புனித நீராடியபோது உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏன் நீராடவில்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விளக்கமளித்துள்ளார்.
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும்வகையில் ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அடுத்த ஆண்டு உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமரின் காசி பயணத்தை பாஜக தேர்தல் வியூகமாக கையாள்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்தநிலையில் பிரதமர் மோடியின் வாரணாசி பயணம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்ததாவது:
‘‘பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சியினர் காசியில் ஒரு மாதம் மட்டும் அல்ல இரண்டு மூன்று மாதங்கள் கூட தங்கலாம். அவர்கள் தங்க ஏற்ற இடம் அது தான்.
பொதுவாக இந்துக்கள் தங்களது கடைசி காலத்தை காசியில் கழிக்கவே விரும்புவர். பிரதமர் மோடி உங்களிடமும் என்னிடமும் பொய் கூறலாம், ஆனால் கடவுளிடம் கூற இயலாது’’ இவ்வாறு அவர் கூறினார்.
இதுமட்டுமின்றி யோகி ஆதித்யாத் பற்றியும் அவர் விமர்சித்துள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இதுபற்றி கூறுகையில் ‘‘வாரணாசியில் நேற்று பிரதமர் மோடி கங்கையில் புனித நீராடியபோது உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நீராடவில்லை. உ.பி.யில் நதிகள் எதுவும் சுத்தமாக இல்லை என்பதை முதல்வர் யோகி ஆதித்யநாத் நன்கு அறிவார், எனவே அவர் கங்கையில் நீராட வேண்டாம் என்று முடிவு செய்ததாக தெரிகிறது.’’ எனக் கூறினார்.