Published : 14 Dec 2021 02:44 PM
Last Updated : 14 Dec 2021 02:44 PM

நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை: ராகுல் காந்தி கடும் விளாசல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சினையையும் எழுப்ப அனுமதி இல்லை என்றும், இது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான படுகொலை என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்டதாக 12 எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரச்சினை எழுப்பி உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் முடிவை திரும்பப் பெற வாய்ப்பில்லை என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று காலை இந்த விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் எழுப்பினர். பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்து பேரணி நடத்தினர். இதில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பேரணியின் முடிவில் கூறியதாவது:

12 எம்.பி.க்கள் இடைநீக்கம் இந்திய மக்களின் குரல் நசுக்கப்பட்டதன் அடையாளமாகும். அவர்களின் குரல்கள் நசுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க எங்களுக்கு அனுமதி இல்லை.

மசோதாக்களுக்குப் பின் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் நிறைவேற்றப்படுகின்றன. இது நாடாளுமன்றத்தை நடத்தும் முறையல்ல. பிரதமர் சபைக்கு வரவில்லை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சினையையும் எழுப்ப எங்களுக்கு அனுமதி இல்லை. இது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான படுகொலையாகும்.

உ.பி.யில் ஒரு அமைச்சர் விவசாயிகளைக் கொன்றார். பிரதமர் மோடிக்கு அது தெரியும். உண்மை என்னவெனில் 2 முதல் 3 முதலாளிகள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்.

இந்த எம்.பி.க்கள் மாநிலங்களவைத் தலைவர் அல்லது பிரதமரால் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள். ஏனெனில் பிரதமரும், மாநிலங்களவை தலைவரும் வெறுமனே இயக்குபவர்கள் மட்டுமே. இவர்களுக்கு பின்னால் விவசாயிகளின் வருமானத்தைத் திருட நினைக்கும் சக்தி இருக்கின்றன. இந்த சக்த தான் இவர்களை இயக்குகின்றன.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x