12 எம்.பி.க்கள் இடைநீக்க விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி

12 எம்.பி.க்கள் இடைநீக்க விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி
Updated on
1 min read

12 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக் வரை பேரணி நடத்தினர்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் இன்று வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்டதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா வர்மா, ஆர். போரா, ராஜாமணி பாட்டீல், சையத் நசீர் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங், சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டோலா டென் உள்ளிட்ட 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரச்சினை எழுப்பி உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் முடிவை திரும்பப் பெற வாய்ப்பில்லை என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். அதேசமயம் மன்னிப்பு கேட்க முடியாது என எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டன.

இந்த விவகாரத்தை தினந்தோறும் மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். மேலும் வெளிநடப்பும் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று காலை இந்த விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் எழுப்பினர். பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர்.

இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் விஜய் சவுக் வரை பேரணி நடத்தினர். இந்த பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in