Published : 24 Jun 2014 03:11 PM
Last Updated : 24 Jun 2014 03:11 PM

ஆந்திரத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

ஆந்திரத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதற்காக, அம்மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக அரசு, ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், அவரது தலைமையிலான அமைச்சரவைக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, "மோடி தலைமையிலான முதல் மத்திய அமைச்சரவை கூட்டத்திலேயே, ஊழலுக்கு எதிராகவும், கருப்புப் பணத்தை கண்காணிக்கவும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது பாராட்டுக்குரியது.

சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்க, அங்கு முறைகேடாக பணத்தை பதுக்கியிருப்பவர்களின் கணக்கு விவரங்களை கேட்டு சுவிஸ் அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது வரவேற்கத்தக்கது.

இந்த அரசின் பொருளாதார, அரசியல் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை நாங்கள் வரவேற்போம். இதன்மூலமே வறுமையை ஒழிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஆனால், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கருப்பு பணத்துக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அவர்கள் ஊழலுக்கு துணைபோனார்கள். நாட்டில் பரவலாக கருப்பு பணம் புழங்க வழி செய்தார்கள்

ஊழல்வாதிகள் பணத்தை வரிவிலக்கு இல்லாத நாட்டில் முதலீடு செய்து பாதுக்காத்து வருகின்றனர். ஒருபுறம், நம் மக்கள் பசியால் வாடும் நிலையில், ஊழல்வாதிகள் பணத்தை பேராசையுடன் பதுக்குகின்றனர். இதற்காக போராடிய அண்ணா ஹசாரேவில் நாடு தழிவிய போராட்டத்திற்கு கூட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அசரவில்லை.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த நான், ஊழலுக்கு எதிராக போராடினேன். ஆனால் தற்போது அமைந்துள்ள மோடி அரசு ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது வரவேற்புக்கு உரியது. தேவைப்பட்டால் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளுக்கு தடை விதிக்கலாம். அமெரிக்காவில் இதுபோல உயர் மதிப்பு உள்ள நாணயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலம் நடைபெற்றால் ஊழல் குறையும்.

ஊழலற்ற இந்தியாவை காண்பதே, தெலுங்கு தேச கட்சியின் நோக்கமாகும். ஊழலை ஒழிக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எங்கள் மாநிலத்தில் மேற்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்" என்று தீர்மானத்திபோது சந்திரபாபு நாயுடு பேசினார்.

இந்தத் தீர்மானத்தை பிரதான எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் தலைவர் ஜகன் மோகன் ரெட்டியும் வரவேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x