கண்ணய்யா உயிருக்கு ஆபத்து: ரூ.11 லட்சம் பரிசு என்ற அறிவிப்பால் பரபரப்பு

கண்ணய்யா உயிருக்கு ஆபத்து: ரூ.11 லட்சம் பரிசு என்ற அறிவிப்பால் பரபரப்பு
Updated on
1 min read

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் ஜாமீனில் விடுதலையாகியுள்ள நிலையில், அவரது நாக்கை அறுத்தால் ரூ. 5 லட்சம், ஆளைக் கொன்றால் ரூ.11 லட்சம் என்று தனித்தனியே இருவர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேஎன்யூ வளாகத்தில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி தேசவிரோத முழக்கமிட்டதாக கண்ணய்யா 12-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் கடந்த 17-ம் தேதி டெல்லி, பாட்டியாலா நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டபோது, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ள கண்ணய்யாவை சுட்டுக் கொல்வோருக்கு ரூ. 11 லட்சம் வெகுமதி என்று அறிவித்து நாடாளுமன்ற வளாகத்தின் அருகில், ரபிமார்க் பகுதியில் இருக்கும் டெல்லி பத்திரிகையாளர் மன்ற சுவரில் 3 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

‘வந்தே மாதரம்’ என்ற தலைப்பில் உள்ள அந்த சுவரொட்டியில் தேசத் துரோகி கண்ணய்யா குமாரை சுட்டுக் கொல்வோருக்கு பூர்வாஞ்சல் சேனா சார்பில் ரூ. 11 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இதற்கு கீழே, ஆதர்ஷ் சர்மா, பூர்வாஞ்சலின் மகன், பூர்வாஞ்சல் சேனா என்று குறிப்பிட்டு மொபைல் எண்ணும் தரப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பாஜக நிர்வாகி பதவி பறிப்பு

முன்னதாக, கண்ணய்யாவின் நாக்கை அறுத்து எடுத்து வருவோருக்கு ரூ. 5 லட்சம் அளிப்பதாக குல்தீப் வார்ஷ்னே என்பவர் அறிவித்தார். மேற்கு உ.பி.யின் பதாயூ மாவட்ட பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (இளைஞர் அணி) தலைவராக இவர் பதவி வகித்து வந்தார். குல்தீப் அறிவிப்பால் சர்ச்சை எழுந்ததை அடுத்து அவரை 6 ஆண்டுகளுக்கு தலைவர் பதவியில் இருந்து பாஜக நீக்கியுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் பதாயூ மாவட்ட பாஜக தலைவர் ஹரீஷ் ஷக்யா கூறும்போது, “குல்தீப் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. இதற்கு கட்சி எந்த விதத்திலும் பொறுப்பல்ல” என்றார்.

இந்த மிரட்டல்கள் மூலம் கண்ணய்யாவின் உயிருக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டிருப்ப தாகக் கருதப்படுகிறது. இந்நிலை யில் கண்ணய்யாவுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மற்றும் அமைப்பு கள் மீது போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in