

பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு பிரத்யோக ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பயன்படுவதாக அத்துறையின் மத்திய இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்தார்.
இது, இன்று மக்களவையில் திமுக எம்.பி.யான டி.எம்.கதிர் ஆனந்த் எழுப்பியக் கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலாக இருந்தது.
வேலூரின் திமுக எம்.பி.யான கதிர் ஆனந்த் எழுப்பியக் கேள்வியில், ‘‘பாதுகாப்புத் துறை தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு பிரத்யேக ஸ்பெக்ட்ரம் அலைவரிசையைப் பயன்படுத்த மத்திய அரசு ஏதேனும் திட்டம் உள்ளதா?
அப்படியானால், நமது இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைப் படைகளின் தகவல் தொடர்பு இடைமறிப்புக்கு எதிராக ஏதேனும் உட்கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு அரசிடம் உள்ளதா?’’ எனக் கேட்டிறிந்தார்.
இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தனது எழுத்துபூர்வமானப் பதிலில் கூறியதாவது:
2015 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி தகவல் தொடர்பு அமைச்சகத்தால் பாதுகாப்பு துறைக்கான பிரத்யேக ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
மேலும் இது பாதுகாப்பு துறை தகவல் தொடர்பு அமைப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து வகைப்படுத்தப்பட்ட தகவல்தொடர்புகளும் பொருள் வகைப்பாட்டின்படி பொருத்தமான முறையில் குறியாக்கம் செய்யப்படுகின்றன.
வகைப்படுத்தப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.