

வாரணாசியில் ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் கோயில் வளாகம்-1 திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு, கங்கை நதிக்கரையிலிருந்து செல்லும்போது, குறுகிய தெருக்கள் வழியாகவும், சாலை வழியாகவும் செல்ல வேண்டியதிருந்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
இதையடுத்து, கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும்வகையில் கடந்த 2019, மார்ச் 8-ம் தேதி ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்தத் திட்டத்துக்காக 300 சிறுகடைகள் கையகப்படுத்தப்பட்டன. 1400 கடைக்காரர்களிடம் சுமூகமாகப் பேசி, இழப்பீடுகளை வழங்கி இடங்களைக் கைப்பற்றி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட திட்டம் முடிக்கப்பட்டுள்ளது.
இதனை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி சென்றுள்ளார். முதல் நிகழ்ச்சியாக கால பைரவர் கோயிலுக்கு சென்று அவர் வழிபாடு நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து காரில் வாரணாசியின் வீதிகள் வழியாக பயணம் செய்த பிரதமர் மோடிக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, மக்கள் வழங்கிய சால்வைகள், தொப்பிகள் போன்றவற்றையும் ஏற்றுக் கொண்டார்.
பின்னர் கங்கையாற்றில் ஈரடுக்கு படகில் பயணித்தார். பின்னர் கங்கையில் புனித நீராடினார்.
காசி விஸ்வநாதர் கோயில் வளாகம்-1 திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் காசி கோயிலில் அவர் வழிபாடு நடத்தினார்.
திறப்பு விழாவுக்கு முன், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களுடன் உரையாடிய மோடி, அவர்களின் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் தொழிலாளர்கள் மீது மலர் தூவினார். பின்னர் அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.