Published : 17 Jun 2014 04:10 PM
Last Updated : 17 Jun 2014 04:10 PM

ஆளுநர்களை மாற்ற பாஜக அரசு தீவிரம்: உத்தரப் பிரதேச ஆளுநர் ஜோஷி ராஜினாமா

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மாநில ஆளுநர்களை மாற்ற பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் எதிரொலியாக உத்தரப் பிரதேச ஆளுநர் பன்வாரி லால் ஜோஷி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பினார்.

கடந்த ஆட்சியில் 2009-ம் ஆண்டு ஜூலை 28-ல் உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப் பட்டவர் பன்வாரி லால் ஜோஷி. இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அதற்கு முன்பாக ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக மத்திய உள்துறைச் செயலாளர் அனில் கோஸ்வாமி 13 மாநில ஆளுநர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு ராஜினாமா செய்யக் கோரியதாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்தே உத்தரப் பிரதேச ஆளுநர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து பிரதமர் மற்றும் குடியரசு தலைவரை சந்திக்க டெல்லியில் முகாமிட்டிருக்கும் சில மாநில ஆளுநர்கள் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

கர்நாடக ஆளுநர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் கூறியபோது, ‘ராஜினாமா குறித்து எந்த தகவலும் வரவில்லை. பதவிக்காலம் முடியும் வரை நான் பதவி விலக மாட்டேன். நான் அரசியலில் நுழைந்த காலம் முதல் குடியரசுத் தலைவர் எனக்கு அறிமுகமானவர் என்பதால் அவரைச் சந்திக்க வந்தேன்’ எனக் கூறினார்.

அசாம் ஆளுநர் ஜே.பி.பட்நாயக் கூறியபோது, ‘நான் ராஜினாமா கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுவது தவறான தகவல். எனது பழைய நண்பரான குடியரசுத் தலைவரை சந்திக்கவே டெல்லி வந்தேன். ராஜினாமா செய்ய அல்ல’ எனப் பதிலளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கேரள ஆளுநர் ஷீலா தீட்சித், ‘வதந்திகளுக்கு பதில் அளிக்க முடியாது’ எனத் தெரிவித்தார். ராஜஸ்தான் ஆளுநரான மார்கரெட் ஆல்வா, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தது ஒரு வழக்கமான சந்திப்பு எனக் கூறப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மார்கரெட் ஆல்வா, கடந்த வருடம் ஏப்ரல் 28-ல் ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியபோது, ‘ஆளுநர்களை மாற்றுவதால் சட்ட சிக்கல் ஏற்படாமல் இருக்க சட்டத் துறையிடம் பிரதமர் ஆலோசனை கேட்டிருந்தார். இதன்படி உத்தரப் பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், பஞ்சாப், ஹரியாணா, கர்நாடகம், அசாம், குஜராத், திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள் பதவி விலக அறிவுறுத்தப்பட்டது. ஷீலா மற்றும் மார்கரெட்டை சிறிய மாநிலங்களுக்கு மாற்றவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தன.

புதிய ஆளுநர் பதவிகளுக்காக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, வி.கே.மல்ஹோத்ரா, பி.சி.கந்தூரி, சாந்தகுமார், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கைலாஷ் சந்திர ஜோஷி, பிஹார் பாஜக மூத்த தலைவர் பி.சி. தாக்குர், பஞ்சாப் மாநில மூத்த தலைவர் பல்ராம் தாஸ் தாண்டன், உத்தரப் பிரதேச மூத்த தலைவர்கள் கல்யாண் சிங், லால்ஜி டாண்டன், கேசரிநாத் திரிபாதி மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் ஆகியோரின் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x