

கடந்த 1971-ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் நிகழ்ச்சி டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில், ஹெலிகாப்டர் விபத்துக்கு முந்தைய நாளில் முப்படைத் தளபதி பிபின் ராவத் பேசிய ஒலிநாடா ஒலிபரப்பப்பட்டது. விழாவுக்காக இது முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதில் மறைந்த முப்படைத் தளபதி கூறியிருப்பதாவது:
நாம், நமது படைகளைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம். இந்த வெற்றியை நாம் ஒன்றாகக் கொண்டாடுவோம்.
ஸ்வர்னிம் விஜய் பர்வ் வெற்றி விழாவில் இந்திய ஆயுதப் படையின் அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 1971 போரில் வெற்றி பெற்றதன் 50-வது ஆண்டு விழாவை விஜய் பர்வ விழாவாக கொண்டாடுகிறோம். இந்தியா கேட்டில் டிசம்பர் 12 முதல் 14 வரை பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. நமது வீரர்களின் நினை வாக அமைக்கப்பட்ட அமர் ஜவான் ஜோதி வளாகத்தில் விஜய் பர்வ் நடத்தப்படுவது பெருமைக்குரியது. இவ்வாறு முப்படை தளபதி பிபின் ராவத் பேசியுள்ளார்.
-பிடிஐ