

இந்திய விமானப்படையில் சேர்ந்து விமானியாக பணியாற்றவேண்டும் என்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகான் மகள் தெரிவித்துள்ளார்.
குன்னுார் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயி ரிழந்தவர்களில் விமானப் படையின் விங் கமாண்டராக பணியாற்றிய பிருத்வி சிங் சவுகானும் ஒருவர்.
அவரது உடல் டிஎன்ஏ சோதனையில் கண்டறியப்பட்டு குடும்பத்தாரிடம் நேற்று முன் தினம் ஒப்படைக்கப்பட்டது. பின் னர் அவரது உடல் அவரது சொந்த ஊரான உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தாஜ்கஞ்ச் மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் பிருத்வி சிங் சவுகானின் 12 வயது மகள் ஆராத்யா கூறியதாவது: நான் என்னுடைய தந்தையை பின்பற்றி நடக்க விரும்புகிறேன். அவர் வழியில் நான் இந்திய விமானப் படை விமானியாக மாறி பணி யாற்றுவேன்.
என் தந்தை எனக்கு முன்மாதிரியாக இருந்தார். அவர் எப்போதும் எனது இலக்குகளில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி வந்தார். நான் அவருடைய ஆலோசனையைப் பின்பற்றி என்னுடைய கனவை அடைவேன். அவர் சொன்னது போலவே செய்ய ஆசைப்படுகிறேன். இதில் மாற்றம் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பிருத்வி சிங் சவுகான் உடலுக்கு மத்திய அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல், ராணுவ அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பிருத்வி சிங் சவுகானின் 7 வயது மகன் அவிராஜ், தனது தந்தை அணிந்திருந்த விமானப்படை தொப்பியை அணிந்துகொண்டு தந்தையின் சிதைக்கு தீ மூட்டினார். மயானத்துக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து சவுகான் உடல் மீது மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.