Last Updated : 13 Dec, 2021 03:06 AM

 

Published : 13 Dec 2021 03:06 AM
Last Updated : 13 Dec 2021 03:06 AM

கிறிஸ்தவ பெண்ணை மணந்த தேஜஸ்வீ: லாலுவின் ஆர்ஜேடி கட்சி ரகசியம் காத்தது ஏன்?

லாலுவின் மகள் ரோஹிணி ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட தேஜஸ்வீ திருமண புகைப்படம்.

புதுடெல்லி

பிஹாரில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் கடந்த ஆட்சியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) தலைவரும் லாலு - ராப்ரி மகனுமான தேஜஸ்வீ யாதவ் (32), துணை முதல்வராக இருந்தார். லாலுவின் 7 மகள்கள் மற்றும் 2 மகன்களில் தேஜஸ்வீக்கு மட்டும் திருமணம் ஆகாமல் இருந்தது.

இந்நிலையில், கடந்த வியாழக் கிழமை மிகவும் ரகசியமான நிகழ்வில் தேஜஸ்வீக்கு திருமணம் முடிந்தது. இது, லாலுவின் மகள் ரோஹினி ஆச்சார்யா யாதவ் டிவிட்டரில் பதிவிட்ட படங்களால் தகவல் உறுதியானது.

லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். தேஜஸ்வீயுடன் அரசியல் ரீதியாகக் மோதிக் கொண்டிருக்கும் தேஜ் பிரதாப் மனைவியை விவாகரத்து செய்தவர். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் தன் மனைவி டிம்பிள் யாதவுடன் கலந்து கொண்டுள்ளார். லாலுவின் மூத்த மகள் மிசாபாரதி எம்.பி.யின் டெல்லி பண்ணை வீட்டில் இந்த திருமணம் யாதவர் முறைப்படி நடைபெற்றதாகத் தெரிகிறது.

ஹரியாணா வியாபாரி மகளான மணப்பெண், தேஜஸ்வீயுடன் டெல்லி டிபிஎஸ் பள்ளியில் 12-ம்வகுப்பு வரை பயின்றவர். அப்போது முதல் இருவரும் காதலித்து வந்துள்ளனர். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ராஜ் நிஷா ரச்சேலை இனி, ராஜ் என லாலு குடும்பத்தினர் அழைக்க முடிவு செய்துள்ளனர்.

லாலு தனது 8 பிள்ளைகளுக்கும் யாதவர் சமுதாயத்திலேயே மணமுடித்திருந்தார். கடைசியாக தேஜஸ்வீ பிரசாத் மட்டும் கிறிஸ்தவப் பெண்ணை மணமுடித்துள்ளார். இதனால், எழும் அரசியல் சர்ச்சைகள் ஆர்ஜேடி கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என அஞ்சி தேஜஸ்வீயின் திருமணம் ரகசியமாக நடந்தேறியதாகக் கருதப்படுகிறது.

கிறிஸ்தவ பெண்ணுடன் பாட்னா திரும்பும் தேஜஸ்வீயை எதிர்க்க போவதாக அவரது தாய் மாமனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான சாது யாதவ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x