

இஷ்ரத் ஜெஹான் என்கவுன்ட்டர் வழக்கில் தங்கள் மீதான கிரிமினல் நடவடிக்கையை தள்ளுபடி செய்யக் கோரி குஜராத் போலீஸ் உயரதிகாரிகள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
குஜராத்தில் கடந்த 2004–ல், அப்போதைய முதல்வர் மோடியை கொலை செய்ய முயன்றதாக கூறி இஷ்ரத் ஜெஹான் என்ற இளம்பெண் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, இது ஒரு போலி என்கவுன்ட்டர் எனக் கூறி சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது.
இஷ்ரத் ஜெஹான் என்கவுன்ட்டர் தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் குஜராத் மாநில முன்னாள் டிஐஜி டி.ஜி.வன்சாரா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணையை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்த பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, "இஷ்ரத் ஜெஹான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி" எனக் கூறியிருந்தார்.
இதனையடுத்து, ஹெட்லி வாக்குமூலத்தை சுட்டிக்காட்டி தங்கள் மீதான கிரிமினல் நடவடிக்கை, சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளை தள்ளுபடி செய்யவேண்டும் என அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையில் நீதிபதி யு.யு.லலித் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
முன்னதாக குஜராத் போலீஸார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, "ஹெட்லியில் வாக்குமூலம் முக்கியத்துவம் வாய்ந்தது. இஷ்ரத் ஜெஹான் லஷ்கர் பயங்கரவாதி என்பதை அவரது வாக்குமூலம் நிரூபித்துள்ளது. எனவே இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும்" என்றார்.
அதற்கு நீதிபதிகள், "இந்த வழக்கு விசாரணை பட்டியலில் இடம்பெறட்டும். அதன்பிறகு என்ன செய்யலாம் என முடிவு எடுக்கப்படும்" என்றனர்.