தாஜ்மஹாலையே நான்தான் கட்டினேன் என நாளை சொன்னாலும் சொல்வார்: அகிலேஷ் யாதவ் மீது பாஜக பாய்ச்சல்

அகிலேஷ் யாதவ், அமித் மாளவியா | கோப்புப்படம்
அகிலேஷ் யாதவ், அமித் மாளவியா | கோப்புப்படம்
Updated on
1 min read

தாஜ்மஹாலையே தான்தான் கட்டினேன் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நாளை சொன்னாலும் வியப்பில்லை என்று பாஜக கட்சி தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பல்ராம்பூரில் சரயு நகர் தேசியத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ரூ.4,600 கோடி மதிப்பில் இருந்தது, தற்போது முடியும் போது ரூ.9,800 கோடியாக அதிகரித்துவிட்டது. கஹாரா, சரயு, ராப்தி, பான்கங்கா, ரோஹினி ஆகிய ஆறுகளை இணைத்து விவசாயப் பாசனத்துக்குச் செயல்படுத்தும் திட்டமாகும்.

இந்தத் திட்டம் மூலம் 14 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். 620 கிராமங்களில் உள்ள 29 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். குறிப்பாக கிழக்கு உ.பி.யில் உள்ள பஹாரியாச், பல்ராம்பூர், கோன்டா, சித்தார்த் நகர், பாஸ்தி, சாந்த்கபீர் நகர், கோரக்பூர் , மகராஜ்காஞ்ச் ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும்.

இந்தத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “ என்னுடைய அரசு இந்தத் திட்டத்துக்கு நிலம் ஒதுக்காமல் இருந்தால் இந்தத் திட்டம் முடிந்திருக்காது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் அகிலேஷ் யாதவின் பேச்சுக்கு பதில் அளித்து பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா நேற்று பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:

''சரயு திட்டம் கடந்த 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஏறக்குறைய 40 ஆண்டுகள் பழமையான திட்டம். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டில் அகிலேஷ் ஆட்சியிலிருந்து இறங்கியபோது, 35 சதவீதப் பணிகள் மட்டுமே இந்தத் திட்டத்தில் முடிக்கப்பட்டிருந்தன. முதல்வர் யோகி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபின்புதான் இந்தத் திட்டம் வேகம் பெற்றது. அடுத்த 4 ஆண்டுகளில் இந்தத் திட்டம் முடிக்கப்பட்டது.

முதலில் இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியது தான்தான் என அகிலேஷ் தெரிவித்தார். ஒவ்வொரு விஷயத்திலும் அகிலேஷ் பொய் கூறுகிறார். தாஜ்மஹால்கூட தான்தான் கட்டினேன் என்று நாளை அகிலேஷ் யாதவ் கூறினாலும் வியப்பேதும் இல்லை.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்புதான் யோகி அரசு விவசாயிகளுக்கும், பெண்களுக்கும், விளிம்புநிலை சமூகத்தினருக்கும் எவ்வளவு பணிகளைச் செய்துள்ளது என்பதை அகிலேஷ் அறிவார். இதற்கான பதில்கள் வரும் காலம் வெகுதொலைவில் இல்லை''.

இவ்வாறு மாளவியா தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in