

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி 2-வது ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து, வடகிழக்கு மாநிலங்களில் நேற்று கறுப்பு தினமாக அனுசரித்துப் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்தச் சட்டத்தின்படி, “கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன், மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளான, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதச் சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்தச் சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது.
இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்” என்பதாகும்.
இந்தச் சட்டத் திருத்தத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினர் வசிக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்தச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளின் குடியேறிகள் அதிக அளவில் வர வழிவகுக்கும் என்றும் அது தங்கள் கலாச்சாரத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்று வடகிழக்கு மாநிலங்களில் கறுப்பு நாளாக அனுசரித்துப் பல போராட்டங்கள் நடந்தன.
வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு, வடகிழக்குப் பகுதிகளில் உள்ள 7 மாநிலங்களிலும் போராட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி வடகிழக்கு மாநிலங்களில் பரவலாகப் பல்வேறு இடங்களில் நேற்று இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கறுப்புக் கொடி ஏந்திப் போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
வடகிழக்கு மாணவர்கள் அமைப்பின் ஆலோசகர் சம்முஜால் பட்டாச்சார்யா கூறுகையில், “அசாம் மாநிலம் மட்டுமல்லாது வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறோம். இந்த நாளைக் கறுப்பு நாளாக அனுசரிக்கிறோம். இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
டிசம்பர் 11-ம் தேதி எங்களுக்குக் கறுப்பு நாள்தான். வடகிழக்கு மக்கள் சிஏஏ சட்டத்தை ஏற்கமாட்டார்கள். பாஜக பிரித்தாளும் அரசியல் செய்ய முயல்கிறது. அதற்காகத்தான் இன்னர் லைன் பெர்மிட் மூலம் 7 மாநிலங்களையும் அமைதிப்படுத்த முயல்கிறது. ஆனால், 7 மாநில மக்களும் சிஏஏ சட்டத்தை ஏற்கமாட்டார்கள்.
நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் நிறைவேறியபோது பரவலாகப் போராட்டம் நடந்தது. ஆனால் எந்த மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படவில்லை. அதற்கு நாங்களும் அனுமதிக்கவில்லை. இந்த நியாயமற்ற சட்டம் அசாம் மக்களின் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, சட்டத்தை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தார்.
அசாம் ஜதியா பரிசத் (ஏஜேபி) தலைவர் லூரின்ஜோதி கோகய் கூறுகையில், “மத்திய அரசு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பலம் இருப்பதால் சிஏஏ சட்டத்தை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், நடைமுறைப்படுத்தவிடமாட்டோம், சட்டத்தைத் திரும்பப் பெறும்வரை எங்கள் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தார்.