

மக்களவையில் தேசதுரோகச் சட்டம் குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த விளக்கத்தையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கும், அவருக்கும் இடையே ட்விட்டரில் வார்த்தை மோதல் ஏற்பட்டது.
மக்களவையில் வெள்ளிக்கிழமை அசாம் மாநிலத்தின் ஏஐயுடிஎப் கட்சியின் எம்.பி. பத்ரூதின் அஜ்மல் கேள்வி எழுப்பினார். அதில், “தேசதுரோசக் சட்டம் என்பது ஆங்கிலேயர் காலத்துச் சட்டம், அது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சட்டம் இப்போது தேவையா என்பது குறித்து மத்திய அரசு பதில் அனுப்ப சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஏதேனும் உத்தரவிட்டதா” எனக் கேட்டார்.
அதற்கு சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளிக்கையில், “இதுபோன்ற எந்தத் தீர்ப்பையும், உத்தரவையும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குப் பிறப்பிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இந்த பதிலின் அடிப்படையில்தான் ட்விட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரமும், கிரண் ரிஜிஜூவும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மக்களவையில் வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சர் அளித்த விளக்கத்தில், ஐசிபி 124ஏ பிரிவை விளக்கும் தேசதுரோகச் சட்டத்தை நீக்கும் திட்டம் ஏதும் இல்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அப்படியென்றால், இன்னும் ஏராளமான அப்பாவி மக்களை இந்த தேசதுரோகச் சட்டத்தில் கைது செய்ய மத்திய உள்துறை திட்டம் வைத்திருக்கிறது என்பதைத்தான் அவர் நேரடியாகச் சொல்லவில்லை என்று அர்த்தமா?
தேசதுரோகச் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் சொன்னதன் மூலம் உச்ச நீதிமன்றம் குறித்து நாளேடுகளில் வரும் செய்திகளை அவர் படிப்பதில்லை எனத் தெரிகிறது” எனத் தெரிவித்தார்.
இதற்கு சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்விட்டரில் ப.சிதம்பரத்துக்கு அளித்த பதிலில், “ காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை ஆயிரம் தேசதுரோக வழங்குகள் பதிவு செய்யப்பட்டன. சட்டத்துறை அமைச்சர் நாளேடுகளைப் படிப்பதில்லை.
ஆனால், ஊடகத்தின் செய்திகள் அமைச்சகத்தின் அதிகாரபூர்வ ஆவணங்களாக மாறாது என்பது அமைச்சருக்குத் தெரியும். எவ்வாறு கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும், முறையான உத்தரவுகளை எவ்வாறு பிறப்பிக்க வேண்டும் என்பது மரியாதைக்குரிய உச்ச நீதிமன்றத்துக்குத் தெரியும்” எனத் தெரிவித்தார்.