பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு 'ஹேக்' செய்யப்பட்டது: பிட் காயின் குறித்து பதிவு

பிரதமர் மோடி | கோப்புப்படம்
பிரதமர் மோடி | கோப்புப்படம்
Updated on
2 min read


பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மர்மநபர்கள் சிலரால் இன்று அதிகாலை திடீரென சிறிதுநேரம் ஹேக் செய்யப்பட்டது. பிட்காயினை இந்தியா அங்கீகரித்துவிட்டதாக பதிவிடப்பட்டிருந்து பின்னர் அது நீக்கப்பட்டது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் “ பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்வி்ட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த சிறிது நேரத்தில் இந்த விவகாரம் ட்விட்டர் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு் உடனடியாக அந்த கணக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.

ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட இந்த சிறித இடைவெளியில் பதிவிடப்பட்டவிஷயங்களை யாரும் நம்ப வேண்டாம், ஒதுக்கிவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட ரீதியில் ட்விட்டரில் 7.34 கோடிபேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். சர்ச்சைக்குரிய அந்த ட்விட் சிறிது நேரத்தில் நீக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பிட்காயின் குறித்த பதிவு வெளியானவுடன் அவரைப் பின்தொடர்ந்து வரும் ஏராளமானோர் ட்விட்டரில் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிரத் தொடங்கினர்.

அதில் “இந்திய அதிகாரபூர்வமாக, சட்டரீதியாக பிட்காயினை பரிமாற்றத்துக்கு அங்கீகரித்துவிட்டது. இந்திய அரசு 500 பிட்காயினை வாங்கியுள்ளது. அதை மக்கள் பலருக்கும் வழங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த ட்விட்டை பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டதையடுத்து நீக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியி்ன் இளைஞர் பிரிவு தேசியத் தலைவர் பிவி. ஸ்ரீனிவாஸ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பிரதமர்மோடியின் ட்வி்ட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டபின், ஹேக்டு என்ற வார்த்தை இந்தியாவில் ட்ரண்டாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ட்விட்டை சிலர் தங்கள் பதிவில் பகிர்ந்து அதில் “ பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. இதில் வரும் செய்திகளை யாரும் பகிராதீர்கள். லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம். பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கே பாதுகாப்பாக இல்லை, எவ்வாறு இந்தியர்களிந் சமூகஊடக கணக்கு ஹேக்கர்களிடமிருந்து, ஸ்கேம்மர்களிடம் இருந்து, வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கும்” எனத் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in