

டெல்லி எல்லையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராடிய விவசாயிகள் நேற்று வெற்றி கொண்டாட்டத்துடன் சொந்த ஊர் புறப்பட்டனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 புதிய வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் டெல்லியின் எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் சமரச முயற்சி பலன்அளிக்கவில்லை. இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம்29-ம் தேதி நாடாளுமன்றத்தில் 3 வேளாண்சட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இதுதவிர, குறைந்தபட்ச ஆதரவு விலைக்குசட்டபூர்வ அந்தஸ்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள்வாபஸ் உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு எழுத்து பூர்வமாக உறுதி அளித்தது.
இதையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாய சங்கங்களின் கூட் டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா கடந்த 9-ம் தேதி அறிவித்தது. வரும் 11-ம் தேதியை வெற்றி தினமாக கொண்டாடுவோம் என்றும் அன்றைய தினம் டெல்லி எல்லைப் பகுதிகளில் இருந்து அனைத்து விவசாயிகளும் வீடு திரும்புவார்கள் என்றும் அறிவித்தது.
இதன்படி, நேற்று காலையில் சிங்கு, டிக்ரி மற்றும் காஜிபூர் எல்லைகளில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை விவசாயிகள் அகற்றினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஏராளமான டிராக்டர்களில் விவசாயிகள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது ஆடல் பாடலுடன் விவசாயிகள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். வண்ணமயமான தலைப்பாகைகளை அணிந்த இளைஞர்களும் முதியவர்களும் உற்சாகமாக நடனமாடியபடியே சென்றனர்.
இதுகுறித்து பஞ்சாப் விவசாயி குல்ஜீத் சிங் அவுலாக் கூறும்போது, “கடந்தஓராண்டாக சிங்கு எல்லை எங்களுடைய இல்லமாக மாறி இருந்தது. கருப்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து சாதி, மத, இன பேதமின்றி நாங்கள் அனைவரும் இணைந்து போராடி வந்தோம். இது வரலாற்று சிறப்புமிக்க தருணம். எங்கள் போராட்டத்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது” என்றார்.