

முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா, மத்திய பிரதேச மாநிலத்தின் ஷடோலை சேர்ந்தவர். இவரது தந்தை மிருகேந் திரா சிங், காங்கிரஸ் எம்எல்ஏவாக 2 முறை இருந்துள்ளார். இவர், அப்பகுதியின் அக்கால ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்.
குவாலியரில் புகழ்பெற்ற சிந்தியா கன்யா வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்த மதுலிகா, துப்பாக்கிச் சுடும் வீராங் கனையாகவும் இருந்துள்ளார். இதுவே, உத்தராகண்ட் மாநிலம் பவுரியை சேர்ந்த பிபின் ராவத்துக்கு மதுலிகாவை பிடித்துப் போக காரணமாக இருந்தது. டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்த மதுலிகாவை 35 வருடங்களுக்கு முன் 1986-ல் பிபின் ராவத் கேப்டனாக இருந்த போது மணமுடித்துள்ளார்.
முப்படைத் தலைவராக பிபின் ராவத் தேர்வானதும் அவரது மனைவி மதுலிகாவுக்கு ராணுவத்தினர் மனைவிகள் நலச் சங்கத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. ராணுவத்தில் ஓய்வு பெற்றவர்களின் குடும்பத் தினரும் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக தொடர்கின்றனர்.
ஒவ்வொரு ராணுவ வீரரின் பின்னணியிலும் அவரது மனைவி இருக்கிறார்.முப்படைத் தளபதி வெற்றிக்கு பின்னாலும் மதுலிகா இருந்துள்ளார்.
இவர் இந்திய ராணுவத்தினரின் மனைவிகளின் பிரச்சினைகளை பொறுமையுடன் கேட்டு தீர்த்து வைப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். ராணுவ வீரர்களின் விதவைகள் அதிகப் பலனடையும் வகையில் மதுலிகா பல்வேறு புதிய சமூகநலத் திட்டங்களை வகுத்துள்ளார்.
இதே பணிக்காக அவர் தனது கணவர் செல்லும் ராணுவ முகாம்களுக்கு உடன் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த வகையில் மதுலிகா ராணுவத்தினரின் குடும்பத்தினரை சந்தித்து குறைகளை கேட்டறிய குன்னூருக்கு கணவருடன் ஹெலி காப்டரில் சென்றுள்ளார். முன்னதாக மதுலிகா பல்வேறு சமூகசேவை அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
தேசத்திற்கு உழைத்த தனது கணவரைப் போலவே மதுலிகாவும் தனது வாழ்நாள் முழுவதும் சமூகத் தொண்டாற்றியுள்ளார். இத்தம்பதிக்கு கிருத்திகா, தாரிணி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் தான் பெற்றோரின் சிதைக்கு தீ மூட்டினர்.