

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் கடந்த புதன்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்த 13 பேரின் உடல்களும் சூலூரில் இருந்து டெல்லிக்கு எடுத்து வரப்பட்டன.
இதில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், முப்படைத் தளபதியின் பாதுகாப்பு ஆலோசகர் எல்.எஸ்.லிட்டர் ஆகியோரின் உடல்கள் நேற்று முன்தினம் முழு ராணுவ மரியாதைக்குப் பிறகு டெல்லி பிரார் சதுக்கத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.
அடையாளம் காணப்படாத உடல்கள் டெல்லி கன்டோன் மென்ட் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஜூனியர் வாரன்ட் ஆபிசர் (ஜேடபிள்யூஓ) பிரதீப், விங் கமாண்டர் பி.எஸ்.சவுகான், ஜேடபிள்யூஓ ராணா பிரதாப் தாஸ், லான்ஸ் நாயக் பி. சாய்தேஜா, லான்ஸ் நாயக் விவேக் குமார் ஆகிய 5 பேரின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு, நேற்று காலை அவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதையடுத்து 5 பேரின் உடல்களும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. சொந்த ஊரில் உரிய ராணுவ மரியாதைப் பிறகு உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்த னர். மற்ற உடல்களையும் அடையாளம் காணும் பணி தொடர்வதாக அதிகாரிகள் கூறினர். -பிடிஐ