

சமூக வலைதளங்களில் முப்படைத் தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக சிலர் ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதுகுறித்து உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று கூறியதாவது: மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத், நமது உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். நமது மாநிலத்துடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்தார். உத்தராகண்ட் மாநில மேம்பாட்டுக்காக எப்போதும் சிந்தனை செய்தவர். அவர் நம் நினைவில் என்றென்றும் நிலைத்திருப்பார். அவருடைய திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முயற்சிப்போம். அவர் ஒரு துணிச்சலான போர் வீரர். தேசத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட, மறைந்த பாதுகாப்புப் படை வீரர்கள் குறித்து சிலர் சமூக ஊடக தளங்களில் ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவது மிகவும் முக்கியமானது. சமூக வலைதளங்களிலோ அல்லது வேறு எந்த வகையிலோ மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத், பாதுகாப்புப் படை வீரர்கள் குறித்து ஏதேனும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை யாராவது தெரிவித்தால், அவர்கள் மீது உத்தராகண்ட் அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு புஷ்கர் சிங் தாமி கூறினார்.