Published : 11 Dec 2021 02:02 PM
Last Updated : 11 Dec 2021 02:02 PM

இந்தியர்களிடம் ‘செரோபாசிட்டிவ் உயர்வாக’ இருப்பதால் ஒமைக்ரான் வைரஸால் பாதிப்பு பெரிதாக இருக்காது: வல்லுநர்கள் நம்பிக்கை

இந்தியர்கள் ஏற்கெனவே கரோனா முதல் அலை, 2-வது அலையில் பாதிக்கப்பட்டு செரோபாசிட்டிவ் விகிதம் 80 சதவீதம் வரை இருப்பதாலும், தடுப்பூசி செலுத்துவது அதிகரித்து இருப்பதாலும், ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு இருக்காது என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலகில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் மீண்டும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் இதுவரை ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் செல்லுலார் மற்றும் மாலிகுலர் பயாலஜி அமைப்பின் முன்னாள் இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஒமைக்ரான் வைரஸால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், “இந்தியர்கள் ஏற்கெனவே கரோனா முதல் அலை, 2-வது அலையால் அதிகமாக பாதிக்கப்பட்டு அவர்கள் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டது.

ஏறக்குறைய 70 முதல் 80 சதவீதம் செரோபாசிட்டிவ் இருக்கிறது. அதிலும் பெரிய நகரங்களில் 90 சதவீதமாக இருக்கிறது. இதில் தடுப்பூசியும் அதிகமான அளவில் மக்கள் ஆர்வத்துடன் செலுத்தி வருகிறார்கள்.

இதனால் மக்களுக்குத் தடுப்பூசியின் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை பாதுகாக்கும். ஒருவேளை மக்கள் பாதிக்கப்பட்டாலும், அது லேசானதாகவே இருக்கும். அறிகுறி இல்லாமல்தான் இருக்கும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் இன்னும் அதிகமானோர் இருக்கிறார்கள். அவர்களும் தடுப்பூசி செலுத்தும்போது, குழந்தைகளுக்கும் செலுத்தும்போது, ஒமைக்ரான் வைரஸிடம் இருந்து அதிகமான பாதிப்பு கிடைக்கும்.

முதல் கட்டமாகக் கிடைத்துள்ள புள்ளிவிவரங்களைப் பார்த்தால் டெல்டா வைரஸைவிட பாதிப்பு குறைவாகவே ஒமைக்ரான் வைரஸ் இருந்து வருகிறது. தொடர்ந்து முகக்கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்துதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல் போன்றவை ஒமைக்ரானிலிருந்து பாதுகாக்க உதவும்” எனத் தெரிவித்தார்.

மூன்றாவது அலை இந்தியாவில் வருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், “அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 3-வது அலை வரும் எனக் கூற முடியாது. ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் இல்லாமலே அடுத்த அலை வந்துவிட்டது. ஒமைக்ரான் வராமல் கூட புதிய அலை வரலாம்.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டதால், வாய்ப்பு குறைவு. அப்படியே 3-வது அலை வந்தாலும், தொற்றால் பாதிக்கப்படும் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், ஆக்சிஜன் பிரச்சினையால் சிக்குவதும் குறைவாகவே இருக்கும்.

கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமல் இருந்தால், லேசான பாதிப்புடன் கூடிய அலை வரலாம். அது மோசமாகக் கூட சென்று பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆதலால் முகக்கவசத்தை அணிதல், தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளுதல் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வழியாகும்” எனத் தெரிவித்தார்.

ஒமைக்ரான் பாதிப்பைக் கண்டறிய என்ன மாதிரியான பரிசோதனை இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மிஸ்ரா பதில் அளிக்கையில், “ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை பாசிட்டிவ் ஏற்பட்ட ஒருவரின் உடலில் இருந்து மாதிரிகளை எடுத்து மரபணு பரிசோதனை மூலம்தான் உறுதி செய்ய முடியும். அதுமட்டும்தான் சரியான வழி. வெளிநாடுகளில் ஒமைக்ரானைக் கண்டறிவதற்காக சிறப்பான ஆர்டிபிசிஆர் கிட் தயாரிக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x