

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கிய கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன என்பது குறித்து முப்படைகளின் விசாரணை தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8-ம் தேதி நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரிக்க ஏர் மார்ஷல் மன்வேந்தர் சிங் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான ஹெலிகாப்டர்களில் அனுபவம் கொண்ட மன்வேந்தர் சிங் இதுவரை 6,600 மணி நேரம் ஹெலிகாப்டரை இயக்கியுள்ளார். அவரது தலைமையிலான குழுவினர் குன்னூரின் நஞ்சப்பசத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 8-ம் தேதி சூலூர் விமானப்படை தளத்தில் இருந்துரஷ்யாவின் எம்ஐ17 ரக ஹெலிகாப்டரில் குன்னூரின் வெலிங்டன் பயிற்சி கல்லூரிக்கு முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் புறப்பட்டனர். இந்த வகை ஹெலிகாப்டரில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரும் பயணம் செய்கின்றனர்.
மதியம் 12.15 மணிக்கு வெலிங்டனில் ஹெலிகாப்டர் தரையிறங்கி இருக்க வேண்டும். ஆனால் 12.08 மணிக்கு ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து முப்படை விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது.
ெஹலிகாப்டரின் கருப்பு பெட்டிமீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விமானி உள்ளிட்டோரின் கடைசி நிமிட பேச்சுகள் கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும். மேலும் ஹெலிகாப்டர் சரியான பாதையில் சென்றதா, எவ்வளவு உயரத்தில் பறந்தது என்பதையும் கருப்பு பெட்டி மூலம் அறிந்து கொள்ள முடியும்.
கடந்த 1996-ம் ஆண்டில் சியாச்சின் மலைப் பகுதியில் எம்.ஐ17 ரக ஹெலிகாப்டரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டது. அந்த ஹெலிகாப்டரின் பாகங்கள் வேதியியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல முப்படை தளபதி பயணம்செய்த ஹெலிகாப்டரின் பாகங்களும் வேதியியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான கடைசி நிமிடங்களில் சிலர்செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அவர்கள் எங்கிருந்து வீடியோ எடுத்தனர் என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முப்படை விசாரணை குழுவின் இறுதி அறிக்கையில் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.