

டெல்லியிலும் மீரட்டிலும் ராணுவ பொறியியல் பிரிவு சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஊழியர் குடியிருப்பு திட்டங்களில் கட்டுமானப் பணியில் தரக்குறைவு மற்றும் ஊழல் புகார் எழுந்ததை தொடர்ந்து சிபிஐ விசாரணை கோருமாறு, முப்படைத் தலைவர் என்ற முறையில் ராணுவத்துக்கு அழுத்தம் கொடுத்தவர் பிபின் ராவத். மேலும் கட்டுமானப் பணியின் தரக்குறைவு தொடர்பாக ராணுவ பொறியியல் பிரிவு அதிகாரிகளை கடிந்து கொண்டார்.
ராணுவத் தளபதியாக, ராணுவ கேன்டீன் கொள்முதலில் அவர் முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டார். ரூ.12 லட்சத்துக்கு மேல் கார் வாங்குவதற்கு அவர் விதித்த தடையால், ஓய்வுபெற்ற ஜெனரல்களின் கோபத்திற்கு ஆளானார்.
மூத்த ராணுவ அதிகாரிகள் ஆடம்பர கார்களையும் விலை உயர்ந்த மதுபானங்களையும் ராணுவ கேன்டீன் மூலமாக வாங்கி அதிக வரி சேமிப்பதை கண்ட அவர், இப்பொருட்களை ராணுவ கேன்டீன் கொள்முதல் செய்ய தடை விதித்தார். தற்போதுள்ள சம்பள அடிப்படையில் ஒரு ராணுவஅதிகாரி அல்லது வீரரால் இப்பொருட்களை வாங்க முடியாது என அவர் அதற்கு காரணம் கூறினார்.
கேன்டீன்களில் வெளிநாட்டு மதுபானங்களுக்கு தடை, கார் கொள்முதலுக்கு உச்ச வரம்பு ஆகியவற்றால் மூத்த அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளானார். உங்களிடம் அவ்வளவு பணம் இருந்தால் அவற்றை வெளிச் சந்தையிலேயே நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றார்.
ஊனமுற்றோர் ஓய்வூதியத்தை முப்படைகளின் மூத்த அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராகவும் அவர் போராடினார். இந்த வழியை பயன்படுத்தி அவர்கள் தங்கள் சம்பளத்தை விட அதிக ஓய்வூதியம் பெறுவதை கண்டுள்ளார். இதனை அவர் எதிர்த்தாலும் போரிலோ அல்லது ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கையிலோ கை, கால்களை இழந்த உண்மையான ஊனமுற்றோருக்கு இந்த விவ காரத்தில் அவர் எப்போதும் ஆதரவாக இருந்தார்.
காஷ்மீரில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில் காயம்ஏற்பட்டு கணுக்காலுக்குள் இரும்புக் கம்பி பொருத்திக் கொண்டபோதிலும் அவர் ஊனமுற்றோர் ஓய்வூதியம் கோரவில்லை. டோக்லாம் பீடபூமி மற்றும் லடாக்கில்சீனப் படைகளுக்கு எதிராக மட்டுமல்ல, ராணுவ அமைப்புக்குள் ஊழலுக்கு எதிராக போராடியதற்காகவும் முப்படைத் தளபதி பிபின் ராவத் நினைவுகூரப்படுவார்.