

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் நிலையில் மதுராவில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் கட்ட வேண்டும் எனக் கோரி பாஜக எம்.பி.ஹர்நாத் சிங் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் வழிபாட்டுத்தலங்கள் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடாளுமன்றக் குளிர்காலக் காட்டத்தொடரில் மதுரா கிருஷ்ணர் கோயில் விவகாரத்தை பாஜகவைச் சேர்ந்த 2-வது எம்.பி. எழுப்பியுள்ளார். கடந்த திங்கள்கிழமை பாலியா தொகுதி பாஜக எம்பி குஷ்வாகா எழுப்பினார். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்போது, ஏன் வழிபாட்டுத்தலங்கள் சட்டம் திரும்பப் பெறப்படாது எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில் இப்போதிருந்தே, ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கான பிரச்சாரத்தை பாஜக தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
வழிபாட்டுத்தலங்களுக்கான சட்டம் என்பது கடந்த 1991ம் ஆண்டு பிரதமராக இருந்த நரசிம்மராவ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில் பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில் கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம்தேதி அன்று வழிபாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்ததோ அதேநிலைநீடிக்க வேண்டும் எனக் கோரி இந்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாஜக எம்.பி.ஹர்நாத் சிங் யாதவ் கேள்வி நேரத்துக்கு பிந்தையநேரத்தில் பேசுகையில் “ வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்து கிருஷ்ணரின் பிறந்த இடத்தை கைப்பற்றியவர்களுக்கு அரசு சட்டப்பூர்வ பாதுகாப்பு அளித்துள்ளது. சமத்துவம், சமத்துவ வாழ்க்கைக்கு எதிரானதாக வழிபாட்டுத்தலங்களுக்கான சட்டம் இருக்கிறது” எனப் பேசினார்.
இவரின் பேச்சுக்கு அவையில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு அமளி நிலவியது. ஆனால், மாநிலங்களவைத் தலைவர் ஏதும் தலையிடாததால், தொடர்ந்து யாதவ் பேசினார். இந்துக்கள், ஜைனர்கள், சீ்க்கியர்கள், பவுத்தர்களின் உரிமையைப் பறிப்பதாக இந்தச் சட்டம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
யாதவ் பேசியதை எவ்வாறு அனுமதித்தீர்கள் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அதற்கு அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ், இதற்கு அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு அனுமதியளித்துவிட்டார் என்று தெரிவித்தார்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் கே ஜா பேசுகையில் “ இதுபோன்று எம்.பி.க்கள் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை அனுமதிப்பதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சேர்ந்து கடிதம் எழுதுவோம். இதுபோன்ற சம்பவம் சமூகஒற்றுமையை குலைக்கும் வகையில் இருக்கிறது, அதிலும் நாடாளுமன்றத்தில் கேள்விநேரத்தில் இதை அனுமதிக்க கூடாது. ராமர் கோயில் பாபர் மசூதி விவகாரத்தில் எத்தனை உயிர்கள் பலியாகின என்பதை அறிவோம்” எனத் தெரிவித்தார்.