

பெண் குழந்தைகளைக் காப்போம் (Beti Bachao, Beti Padhao (BBBP)) திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகையில் 80 சதவீதம் விளம்பரத்துக்காகவே செலவிடப்பட்டுள்ளது. இந்த செயல்முறையை மாற்றி, பெண் குழந்தைகளின் சுகாதாரம், கல்விக்காகச் செலவிட வேண்டும் என்று மகளிருக்கான அதிகாகரம் அளிக்கும் நாடாளுமன்றக்குழு மக்களவையில் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது.
மகளிருக்கான அதிகாகரம் அளிக்கும் நாடாளுமன்றக்குழுவுக்கு தலைவராக ஹீனா விஜயகுமார் காவித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். “ பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற சிறப்பான சுட்டிக்காட்டலுடன் கல்வி மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல்” என்ற தலைப்பில் நேற்று மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பெண் குழந்தைகளைக் காப்போம் எனும் திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. கருவிலேயே ஆண் பெண் எனப் பாகுபாடு பார்த்து கருக்கலைத்தலை குறைக்கும் வகையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 1000 சிறுவர்களுக் 918 சிறுமிகள் என்ற அளவில் 2011ம் ஆண்டு விகிதம் குறைந்ததால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை இந்தத் தி்ட்டம் நாட்டில் 405 மாவட்டங்களைக் கடந்துள்ளது.
மகளிருக்கான அதிகாகரம் அளிக்கும் நாடாளுமன்றக்குழு மக்களவையில் தாக்கல் செய்த அறிக்கையின் சுருக்கம் வருமாறு:
கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டுவரை பெண் குழந்தைகளைக் காப்போம் திட்டத்துக்கு ரூ.446.72 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 78.19 சதவீதம் தொகை ஊடகங்களில் விளம்பரம் செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக விளம்பரத்துக்காகச் செலவிடப்பட்டு, அரசியல் ரீதியான கவனத்தை ஈர்க்கவும், பெண் குழந்தைகளின் மதிப்பை தேசம் உணரவைக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இனிமேல், இந்தத் திட்டத்தின் ஒதுக்கப்படும் நிதியை பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு செலவிட்டு, அதில் கவனம் செலுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்த திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட தொகையை பயன்படுத்தியவிதம் மோசமாக இருந்துள்ளது.கடந்த 2014-15 முதல் 2019-2020வரை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.848 கோடியாகும்.இந்த காலகட்டத்தில் ரூ.622.48கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, இதில் 25.13 % நிதி, அதாவது ரூ.156.46 கோடியை மட்டும்தான் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் செலவிட்டுள்ளன.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பார்த்தால், இரு அம்சங்கள் உள்ளன. ஒன்று மக்களின் ஆதரவைப் பெறுதல், ஊடக விளம்பரம்.அதாவது வானொலி விளம்பரம், இந்தியில் சிறிய பாடல் மூலம் விழிப்புணர்வு, பிராந்திய மொழிகளில் விளம்பரங்கள் செய்வதாகும்.
இது தவிர தொலைக்காட்சி விளம்பரம், வெளிப்புற விளம்பரங்கள், தினசரி நாளேடுகளில் விளம்பரங்கள், வாகனங்கள் மூலம் விளம்பரம் செய்தல், குறுஞ்செய்தி மூலம் விளம்பரம், பதாகைகள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம், அதிலும் குறிப்பாக பாலினப்பாகுபாடு, இடைவெளி அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் விளம்பரம் செய்தல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளைக் காப்போம் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் பெரும்பகுதி விளம்பரத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.50 லட்சம் ஒரு மாவட்டத்துக்கு பல்வேறுவகைகளில் செலவிடப்பட்டுள்ளது. 16 சதவீதம் நிதி பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஆலோசனை நடத்தவும், 50 சதவீதம் விழிப்புணர்வு செயல்களுக்கும், 6 சதவீதம் நிதி கண்காணிப்புப் பணிக்ககாவும், 10 சதவீதம் மட்டுமே சுகாதாரத்துறை சார் செயல்பாடுகளுக்கும், 10 சதவீதம் கல்விக்காகவும், 8 சதவீதம் நிதி இதர செலவுகளுக்கும் செலவிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.