

உலகின் பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் இருந்து வருவதையடுத்து, சர்வதேசஅளவிலான வர்த்தகரீதியான பயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடையை 2022, ஜனவரி 31ம் தேதிவரை நீட்டித்து விமானப் போக்குவரத்து துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து டிசம்பர் 15ம் தேதி தொடங்குவதாக முன்புஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு நாடுகளிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரி்த்துவருவதைக் கருத்தில் கொண்டு, சர்வதேச விமானங்கள் சேவையை தொடங்குவதை தற்காலிகமாக டிஜிசிஏ நிறுத்திவைத்துள்ளது.
இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து துறை இயக்குநரகம்(டிஜிசிஏ) நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில், “ கடந்த நம்பர் 26ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் சிறிய மாற்றம் செய்துள்ளோம்.
சர்வதேச அளவிலான வர்த்தகரீதியான பயணிகள் விமானப் போக்குவரத்து 2022, ஜனவரி 31்ம் தேதி இரவு 11.59 வரை தொடங்கப்படாது. அதேநேரம், சரக்குப் போக்குவரத்துக்கு விமானங்களுக்கு தடை ஏதும் இல்லை. சர்வதேச விமானச் சேவை என்பது குறிப்பிட்ட வழித்தடங்களில் இரு நாடுகளிந் விமானப் போக்குவரத்து ஆணையங்களின் ஒப்புதலுடன் கட்டுப்பாடுகளுடன் நடக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா, ஐரோப்பாவில் பல்வேறு நாடுகள், ஆப்பிரி்க்க நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துவருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்த 20 பரிசோதனை மையங்கள் டெல்லி விமானநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விமானப் பயணத்துக்கு வருவோர் டிக்கெட் முன்பதிவின்போதே கரோனா பரிசோதனை சான்றிதழ் இணைப்பு மற்றும் வந்திறங்கியபின் பிசிஆர் பரிசோதனை ஆகியவை செய்யப்படுகிறது.
எச்சரிக்கை பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்டிப்பாச பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் நெகட்டிவ் வந்தபின்புதான் விமானநிலையத்தைவிட்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.