முப்படை புதிய தளபதியாக நரவானே தேர்வாக வாய்ப்பு

மனோஜ் முகுந்த் நரவானே
மனோஜ் முகுந்த் நரவானே
Updated on
1 min read

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவானே நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தின் குன்னூர் அருகேநேற்று முன்தினம் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பதவி மூப்பில் முன்னிலை

இந்தக் கூட்டத்தில் முப்படைகளின் புதிய தளபதியை தேர்வுசெய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. ராணுவம்,கடற்படை, விமானப் படை தளபதிகளில் ஒருவர் முப்படைகளின் தளபதியாக தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதவி மூப்பின் அடிப்படையில் கடற்படை தளபதி ஹரி குமார், விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரியைவிட ராணுவ தளபதி நரவானே முன்னிலையில் உள்ளார். தற்போது 60 வயதாகும் அவர் சுமார் 40 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி உள்ளார். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க நரவானே, போர் வியூகம் வகுப்பதில் வல்லவர். கடந்த 1987-ம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதிப் படையிலும் அவர் இடம் பெற்றிருந்தார். எனவே முப்படைகளின் புதிய தளபதியாக மனோஜ் முகுந்த் நரவானே தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in