

மணிப்பூரின் இரும்புப் பெண் என அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, ஆயுதப்படை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.
வடகிழக்கு மாநிலங்களில், ஆயுதப்படை சிறப்புச் சட்டம்-1958 அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் ராணுவத்துக்கு அளவில்லா அதிகாரம் அளிக்கப் பட்டிருக்கிறது. அங்கு சந்தேகப்படும் யாரையும் பிடிஆணை இன்றிக் கைது செய்யவும், சுட்டுக் கொல்லவும் ராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000 நவம்பர் 2-ம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே மலோம் என்ற இடத்தில் அசாம் ரைபிள் படைப்பிரிவினர் 10 அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தையடுத்து, ஆயுதப்படை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். 15 ஆண்டுகளாக அவரது உண்ணாவிரதப் போராட்டம் நீடித்து வருகிறது.
இதற்கிடையில், தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். திங்கள்கிழமை இம்பால் நீதிமன்றம் அவரை விடுவித்தது.
இதனையடுத்து நேற்று (திங்கள்கிழமை) தனது ஆதரவாளர்களுடன் ஷாஹித் மந்திர் பகுதிக்குச் சென்ற அவர் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஆயுதப்படை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி அறவழியில் தொடர்ந்து போராடுவேன். வன்முறையால் எந்த பிரச்சினைக்கு தீர்வு கிட்டாது" என்றார்.