

*
தங்க நகைகளுக்கு விதிக்கப் பட்டுள்ள ஒரு சதவீத உற்பத்தி வரியை திரும்ப பெறக்கோரி நகை வியாபாரிகள் 18 நாளாக ஈடுபட்டு வந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் இரவு முடிவுக்கு வந்தது. இந்த வேலை நிறுத்தத்தால் 60,000 கோடி ரூபாய் முதல் 70,000 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு கூறியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் அறிவிப்பில் தங்க நகைகளுக்கு ஒரு சதவீத உற்பத்தி வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு நகை வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு மேல் நகை வாங்குபவர்களுக்கு பான் கார்டு அவசியம் என்று மத்திய அரசு அறிவித்ததற்கும் நகை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சுமார் 358 கூட்டமைப்புகளைச் சார்ந்த நகைக்கடை உரிமையாளர் கள், மொத்த விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோர் மார்ச் 2-ம் தேதியிலிருந்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
18 நாளாக நடைபெற்று வந்த தொடர் வேலை நிறுத்தத்தால் 60,000 கோடி ரூபாய் முதல் 70,000 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டிருக் கலாம் என்று ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு, இந்திய புல்லியன் மற்றும் ஜூவல் லர்ஸ் கூட்டமைப்பு, ஜிஜேஎஃப் போன்ற முக்கிய நகை விற்பனை மற்றும் உற்பத்தி சங்கங்கள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை நேற்று முன் தினம் சந்தித்து பேசிய பிறகு தொடர் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
“வரித் துறை அதிகாரிகளால் ஜூவல்லர்ஸ்க்கு தொந்தரவு இருக்காது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளதால் இந்த தொடர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம்” என்று ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி கூட்டமைப்பு தலைவர் தர் தெரிவித்துள்ளார். “உற்பத்தி வரி திரும்ப பெறப்படாது. ஆனால் குறைகளை கருத்தில் எடுத்துக் கொள்கிறோம். மேலும் வரித்துறை அதிகாரிகளின் ஆதிக்கம் இருக்காது என்று நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அனைத்து சங்கங்களும் தொடர் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற ஒப்புக்கொண்டன” என்று அவர் தெரிவித்தார்.
குழு அமைப்பு
நகை வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் கோரி வரும் உற்பத்தி வரி தொடர்பான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பொருளாதார நிபுணரும் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான அசோக் லாகிரி தலைமையில் மூன்று உறுப்பினர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி 60 நாட்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி கூட்டமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
உற்பத்தி தொடர்பான பிரச் சினைக்கு மூன்று உறுப்பினர்கள் கொண்ட கமிட்டி அமைத்தற்கு மத்திய அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்த வரியால் முக்கியமாக சிறு நகை வியாபாரிகள்தான் பாதிக்கப்படுவார்கள் என்று ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி மேம்பாட்டு கூட்டமைப்பு தலைவர் பிரவீன்சங்கர் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு மாதங்களில் கமிட்டி தீர்வை கண்டுபிடித்துவிரும் என்று பிரவீண் சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
மொத்த ஜிடிபியில் ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி துறை 3.5 சதவீதம் பங்களிப்பை அளித்து வருகிறது. முறைப்படுத்தப்படாத இந்தத் துறையில் மொத்தம் 45 லட்சம் நபர்கள் பண்புரிந்து வருகின்றனர்.