Published : 20 Jun 2014 05:30 PM
Last Updated : 20 Jun 2014 05:30 PM

அனைத்து வகுப்பு ரயில் கட்டணமும் உயர்வு

அனைத்து வகுப்பு ரயில் கட்டணமும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகள் கட்டணமும் சரக்கு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. சீசன் கட்டணமும் உயர்கிறது. இந்த கட்டண உயர்வு ஜூன் 25-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பயணிகள் ரயில் போக்குவரத்துக்கான மானியத் தொகை மிக அதிகபட்சமாக ரூ.26,000 கோடியை எட்டியுள்ளதால் ரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

இருப்பினும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே இடைக்கால பட்ஜெட்டில் கட்டணம் உயர்த்தப் படவில்லை.

மே 16-ம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான போது ரயில் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பும் வெளியானது. அதன்படி பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும் சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டு மே 20 முதல் புதிய கட்டண விகிதம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டு கட்டண உயர்வு குறித்து புதிய அரசு முடிவு செய்யும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து புதிய ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்ற சதானந்த கவுடா, ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்று அவ்வப்போது சூசகமாகத் தெரிவித்துவந்தார்.

நாள்தோறும் ரூ.30 கோடி இழப்பு

ரயில்வே துறையில் நாள்தோறும் ரூ.30 கோடி இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோருடன் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா கடந்த வாரம் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்த சதானந்த கவுடா, ரயில் கட்டண உயர்வு தொடர்பாக பிரதமரை மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தப்படும்.அதன்பின்னர் இறுதி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும் சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்படுவதாக ரயில்வே துறை வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இரண்டாம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்பு ரயில் கட்டணங் களும் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்த கட்டண உயர்வு ஜூன் 25 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.8,000 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விளக்கம்

இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா டெல்லியில் நிருபர்களிடம் கூறிய போது, கடந்த ஆட்சியிலேயே கட்டண உயர்வு நிர்ணயிக்கப் பட்டுவிட்டது. அதைத்தான் இப்போது அமல்படுத்தியுள்ளோம். கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.

ஜூலை முதல் வாரத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் முன்னதாகவே பயணிகள், சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு எத்தனை சதவீதம்?: ரயில்வே அதிகாரி விளக்கம்

பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் அனைத்து வகுப்புகளுக்கான கட்டணமும் 10 சதவீதம்தான் உயர்த்தப்பட்டுள்ளது என்று ரயில்வே அதிகாரிகளுக்கு வந்துள்ள சுற்றறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தெற்கு ரயில்வே மூலம் கிடைத்துள்ள சுற்றறிக்கையின்படி, பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டி உள்பட அனைத்து வகுப்புகளுக்கான கட்டணமும் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது அடிப்படை ரயில் கட்டணத்தில் 10 சதவீதம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வுடன் முன்பதிவுக் கட்டணம், சூப்பர்பாஸ்ட் கட்டணம் சேர்க்க வேண்டும். ஏசி வகுப்பாக இருந்தால் சேவை வரியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். கிலோ மீட்டர் அடிப்படையில் சேவை வரி கணக்கிடப்படுகிறது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்கு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிக்கான (ஸ்லீப்பர் கிளாஸ்) தற்போதைய அடிப்படைக் கட்டணம் ரூ.316-ம், முன்பதிவுக் கட்டணம் ரூ.20-ம், சூப்பர்பாஸ்ட் கட்டணம் ரூ.30-ம் ஆக மொத்தம் ரூ.366 வசூலிக்கப்பட்டது. இப்போது அடிப்படைக் கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதால் (ரூ.31.60), அத்தொகையையும் சேர்த்து ரூ.397.60 வசூலிக்கப்படும்.

அனைத்து வகுப்புகளுக்கான தற்போதைய முன்பதிவுக் கட்டணம், சூப்பர்பாஸ்ட் கட்டணம், சேவை வரி ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. அதேநேரத்தில் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் சற்று உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x