

சேலம் எஃக்கு உருக்கு ஆலையின் பய்ன்படாமலிருக்கும் நிலத்தில் மத்திய அரசின் வணிகரீதியான உற்பத்தி தொழிற்சாலை அமைக்க கோரப்பட்டுள்ளது. இதை அத்தொகுதியின் மக்களவை எம்.பி.யான எஸ்.ஆர்.பார்த்திபன் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பினார்.
இதுகுறித்து சேலம் மக்களவை தொகுதியின் திமுக எம்.பி.யான எஸ்.ஆர்.பார்த்திபன் பேசியதாவது: மத்திய அரசு ஏற்கனவே “தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை தாழ்வாரம்” திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சேலம் உட்பட 6 நகரங்கள் பயன்பெறும். இந்திய விமானப்படையின் பயன்பாட்டிற்காக வான்வழி முன்னறிவிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை (AEW&C) உள்நாட்டிலேயே உருவாக்க ரூ.10,990 கோடி திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஏர்போர்ன் சிஸ்டம்ஸ் மையமானது, ராணுவ ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால் (டிஆர்டிஓ) உருவாக்கப்பட்டது, இது தமிழ்நாட்டில் உள்ள தொழில்துறையின் தீவிர பங்கேற்புடன், அமலாக்கப்பட்டு வருகிறது.
இந்த அமைப்புகளின் வணிகரீதியான உற்பத்தியை மேம்படுத்துவதற்காக டிட்கோ மூலம் பொது-தனியார் மற்றும் கூட்டு கூட்டமைப்பை உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.
சேலம் எஃக்கு ஆலையில் பயன்படுத்தப்படாத நிலத்தில் AEW&C அமைப்பின் வளர்ச்சி, வணிகரீதியான உற்பத்திக்காக டிட்கோ தலைமையிலான தொழிற்துறையை ஊக்குவிக்க மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே நிதி 50:50 என்பதற்கு பதிலாக 25:75 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்படலாம். மூலதன மானியம் அனுமதிக்கப்படும்
இரண்டு பாதுகாப்பு தொழில்துறை தாழ்வாரங்களிலும் உள்ள அலகுகளின் எண்ணிக்கையை சேலத்தில் அதிகரிக்கவும் அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறேன்.
இதனால், சேலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், எனது சேலம் தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.