2021-ம் ஆண்டில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட விஷயங்கள் என்னென்ன?திரைப்படம் என்ன?

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
3 min read

2021-ம் ஆண்டில் கூகுள் தேடுதளத்தில் அதிகமாகத் தேடப்பட்ட விஷயங்கள் குறித்து இந்த ஆண்டு தேடப்பட்ட அம்சங்கள் என்ற தலைப்பில் கூகுள் இந்தியா நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் இந்தியாவில் மதமாகப் பார்க்கப்படுகிறது என்று சொல்வார்கள். அது முற்றிலும் உண்மை. மக்கள் உயிரைக் காவுவாங்கும் கரோனா வைரஸ், உயிர் காக்கும் கரோனா தடுப்பூசி என உலகமே கரோனாவின் அச்சத்தில் இருந்தாலும் இந்தியர்களுக்கு கிரிக்கெட் மீதான தீராக்காதல் குறையவில்லை.

அந்த வகையில் 2021-ம் ஆண்டில் அதிகமாகத் தேடப்பட்டது கிரிக்கெட் விளையாட்டுதான். ஆம், அதிகமாகத் தேடப்பட்டதில் முதலிடத்தில் இருப்பது ஐபிஎல் டி20 போட்டிதான். அடுத்து ஐசிசி டி20 உலகக் கோப்பையாகும். கரோனாவின் பிடியில் உலகமே இருந்தாலும், கரோனா தடுப்பூசி, கோவின் போர்டல் போன்றவை அடுத்தடுத்த இடங்களில்தான் இருக்கின்றன.

அதிகமாகத் தேடப்பட்ட விளையாட்டுகளில் ஐபிஎல் முதலிடத்தையும், கோவின் போர்டல் இரண்டாவது இடத்தையும், 3-வதாக ஐசிசி டி20 உலகக் கோப்பை, யூரோ கோப்பை, டோக்கியோ ஒலிம்பிக்ஸ், கோவிட் தடுப்பூசி போன்றவை டாப் தேடுதல் பட்டியலில் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டிலும் முதலிடத்தில் ஐபிஎல் டி20 இருந்த நிலையில், இந்த ஆண்டும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர்த்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ், பிளாக் ஃபங்கஸ் (கருப்புப் பூஞ்சை), ஆப்கானிஸ்தான், மே.வங்க தேர்தல், தட்கே புயல், லாக்டவுன் போன்றவையும் டாப்10 தேடுதல் பட்டியலில் உள்ளன.

விளையாட்டுகள் வரிசையில் ஐபிஎல், டி20 உலகக் கோப்பைக்கு அடுத்து, யூரோ கோப்பை, கோபா அமெரிக்கா, விம்பிள்டன், பாராலிம்பிக்ஸ், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போன்றவை இடம் பெற்றுள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று தேசத்துக்குப் பெருமை சேர்த்தார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் அதிகமாக இந்தியர்களால் தேடப்பட்டது.

பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால் இருவரின் பெயரும் அதிகமாகத் தேடப்பட்டுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்டுள்ளார். இவர் தவிர விக்கி கவுசால், ஷேனாஸ் கில், ராஜ் குந்த்ரா ஆகியோரும் இந்தியர்களின் விருப்பமாக இருந்துள்ளனர். இதுதவிர பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, பஜ்ரங் பூனியா இருவரும் அதிகமாகத் தேடப்பட்டனர்.

திரைப்படங்கள் வரிசையில் தமிழ்த் திரையுலகில் ஓடிடியில் நடிகர் சூர்யா தயாரிப்பு, நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் அதிகமாகத் தேடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படம் 'ஷோர்ஷா',' ராதே', 'பெல் பாட்டம்' ஆகிய படங்கள் தேடப்பட்டுள்ளன. ஹாலிவுட் திரைப்பட வரிசையில் 'காட்ஸில்லா-காங்' மற்றும் 'எட்டர்னல்ஸ்' ஆகிய படங்கள் தேடப்பட்டுள்ளன.

'ஹவ் டூ' (How to) என்ற ஆங்கில வார்த்தை அதிகமாக கூகுளில் தேடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் அளவை உயர்த்துவது எப்படி (How to increase oxygen level), வீட்டிலேயே ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி (How to make oxygen at home), கரோனா தடுப்பூசிக்கு எப்படி பதிவு செய்வது (How to register for covid vaccine) ஆகியவை அதிகமாகத் தேடப்பட்டுள்ளன

இது தவிர எனது அருகே (near me) எனும் வார்த்தையும் அதிகமாகத் தேடப்பட்டுள்ளது. மேலும், கோவிட் தடுப்பூசி, கோவிட் பரிசோதனை, கோவிட் மருத்துவமனை ஆகியவையும் தேடுதலில் முதலிடத்தில் உள்ளன.

ஆக்சிஜன் சிலிண்டர்கள், சிடி ஸ்கேன் ஆகியவை இந்தியர்களால் கரோனா காலத்தில் அதிகமாகத் தேடப்பட்டுள்ளன. உணவுச் சேவையில் காலைச் சிற்றுண்டி, டேக் அவுட் ரெஸ்டாரண்ட், பார்சல் எங்கு வழங்கப்படும் என்பது அதிகமாகத் தேடப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் கருப்புப் பூஞ்சை குறித்தும், தலிபான்கள் குறித்தும், ரெம்டெசிவிர் மருந்து குறித்தும் தேடப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in