

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்காக தகவல்களைத் தந்து உதவுங்கள் என்று சிறப்பு புலனாய்வுக் குழு அப்பகுதி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாகாலாந்தில் கடந்த டிசம்பர் 4 (சனிக்கிழமை) அன்று இரவு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாகாலாந்தில் மியான்மர் எல்லை அருகே உள்ள மோன் மாவட்டத்தையொட்டிய ஓட்டிங் கிராமத்தில் நாகா தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் கடும் சோதனை மேற்கொண்டபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
அப்போது பணியில் இருந்த வீரர்களுக்கும் ஒரு கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதில் தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் சுட்டனர். இதில் பொதுமக்கள் 6 பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்த கூலித் தொழிலாளர்கள் ஆவர்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் ஊருக்கு வந்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தவர்கள். தங்களது கிராமங்களுக்கு செல்ல காத்திருந்த போதுதான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து ஏற்பட்ட மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
பாதுகாப்புப் படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய் அன்று நாடாளுமன்றத்தில் கவலை தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து ராணுவம் வருத்தம் தெரிவித்ததுடன், உயர்மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
நாகாலாந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை, புகைப்படங்கள், வீடியோக்கள், சந்தேகத்திற்கிடமான ஆட்களின் நடமாட்டங்கள் போன்றவற்றைக் கண்டால் அதை கொடுத்துதவுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டது.
இதுகுறித்து நாகாலாந்து காவல்துறை அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளதாவது:
"டிசம்பர் 4, 2021 அன்று, ஓட்டிங் கிராமத்திற்கு அருகே 13 (பதின்மூன்று) பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக, பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து முதன்மை ஆதாரம் அல்லது சம்பவத்துடன் தொடர்புடைய பிற தகவல்கள் ஏதேனும் தகவல் இருந்தால் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT)வை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கோரப்படுகிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக முதன்மை ஆதாரத்தில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அல்லது சம்பவத்துடன் தொடர்புடைய பிற தகவல்கள், காவல்துறை விசாரணையின் நலனுக்காக தயவுசெய்து பகிரவும்"
இவ்வாறு நாகாலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.