

நாட்டின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்பட 14 பேர் பயணம் செய்த விமானப் படையின் எம்ஐ17வி5 ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கும் முன் மரத்தில் மோதியது என்று நேரில் பார்த்தவர் அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான விமானப்படையின் அதிநவீன எம்ஐ7வி5 ஹெலிகாப்டர் கடந்த 2012-ம் ஆண்டு விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சில விபத்துகளை இந்த ரக ஹெலிகாப்டர்கள் சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது.
கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக நேற்று காலை இரு ஹெலிகாப்டர்கள் சென்றன.
அதில் ஒரு ஹெலிகாப்டரில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர்தான் குன்னுர் அருகே காட்டேரி மலைப்பகுதியில் நஞ்சப்பசத்திரம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இதில் ஹெலிகாப்டரில் பயணித்த தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த பி. கிருஷ்ணசாமி என்பவர் பார்த்துள்ளார். 'தி இந்து'வுக்கு (ஆங்கிலம்) அளித்த பேட்டியில், “ ஹெலிகாப்டர் வானில் பறந்தபோது பெரிய சத்தம் கேட்டது..
அப்போது, திடீரென பெரிய சத்தம் கேட்டது. இதைக் கேட்டதும் வெளியே வந்து பார்த்தோம். ஹெலிகாப்டர் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கும் முன், ஒரு மரத்தில் மோதி தொங்கிக்கொண்டிருந்தது.
ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் தீ விபத்து ஏற்படும் முன் அதிலிருந்து தப்பிக்க முயன்றார்கள், சிலர் உதவிக்காக குரல் எழுப்பினார்கள். ஆனால், ஹெலிகாப்டரிலிருந்து தீப்பிழம்பு பெரிதாக வெளியானதால் எங்களால் அருகே செல்ல முடியவில்லை” எனத் தெரிவித்தார்.
பி.சந்திரகுமார் என்பவர் கூறுகையில், “இந்த விபத்து நடந்தபோது சிலர் மட்டுமே பார்த்தோம். அதில் நானும் ஒருவர். முதலில் ஏதேனும் கியாஸ் சிலிண்டர் வெடித்துவிட்டதாக நினைத்தோம். அதுபோன்று தீப்பிழம்பும், பெரிய அளவிலான சத்தமும் வந்தது. வழக்கமாக வெலிங்டன் ராணுவ கல்லூரிக்குச் செல்லும் ஹெலிகாப்டர்கள் மலைப்பகுதிக்கு மேலேதான் பறந்து செல்லும். ஆனால், விபத்து நடந்த நேற்று மேகமூட்டம் கடுமையாக இருந்தது” எனத் தெரிவித்தார்.
மற்றொருவர் கூறுகையில், “நல்ல வேளை ஹெலிகாப்டர் வீட்டின் மீது மோதவில்லை. ஹெலிகாப்டர் விழுந்த இடத்துக்கு சில மீட்டர் அருகே வீடுகள் இருந்தன. ஒருவேளை வீட்டின் மீது ஹெலிகாப்டர் மோதியிருந்தால், உயிரிழப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். விபத்து நடந்ததைப் பார்த்தபின்புதான் உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் நாங்கள் தகவல் கொடுத்தோம்” எனத் தெரிவித்தார்.