Published : 09 Dec 2021 10:46 AM
Last Updated : 09 Dec 2021 10:46 AM

விவசாயிகளின் ஓராண்டு போராட்டம் இன்று முடிவுக்கு வருகிறதா?

கோப்புப்படம்

புதுடெல்லி

வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஓராண்டாக டெல்லியின் புறநகரில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் இன்றுடன் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொள்வார்கள் எனத் தெரிகிறது.

நிலுவையில் உள்ள தங்களின் கோரிக்கைகளை அதிகாரபூர்வ வடிவில் அனுப்பினால் தீர்ப்பதாக மத்திய அரசு திருத்தப்பட்ட அறிக்கையில் தெரிவித்ததை ஏற்க விவசாயிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகளைத் திரும்பப் பெறவும் மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒப்புக்கொண்டன.

மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்ந்து போாரட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுடன் 11 சுற்றுப் பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்தியும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.

இந்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது.

இந்நிலையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், நிலுவையில் இருக்கும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கும் பல்வேறு விவசாய சங்கங்களுக்கும் இடையே நடந்த பேச்சுக்குப் பின் விவசாயிகள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ மத்திய அரசிடம் திருத்தப்பட்ட திட்ட அறிக்கையைப் பெற்றுக்கொண்டதை சம்யுக்தா கிஷான் மோர்ச்சா உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக எங்களுக்குள் கருத்தொற்றுமையும் ஏற்பட்டு, அதை ஏற்கிறோம். முறைப்படி அரசு சார்பில் எங்களுக்குக் கடிதம் வர வேண்டும். அதற்காகக் காத்திருக்கிறோம். நாளை (வியாழக்கிழமை) சிங்கு எல்லையில் கூடி முறைப்படியான முடிவுகளை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளது.

பாரதிய கிஷான் சங்கத்தின் பொதுச் செயலாளர் யுத்விர் சிங் கூறுகையில், “மத்திய அரசிடம் இருந்து வெள்ளைத்தாளில்தான் திருத்தப்பட்ட திட்ட அறிக்கை வந்துள்ளது. ஆனால், அதிகாரபூர்வ கடிதமாக வரவில்லை. அந்தக் கடிதம் கிடைக்கும்வரை காத்திருப்போம். அதுவரை போராட்டத்தை விலக்க வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.

ஆனால், விவசாயிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், பெரும்பாலான தலைவர்கள் இன்று பிற்பகலுக்குப் பின் வீடு திரும்ப விருப்பமாக இருப்பதாக விவசாயிகள் பலர் தெரிவிக்கிறார்கள்.

வேளாண் போராட்டங்களின்போது பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதேபோல உ.பி. அரசு, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா அரசுகளும் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு மாநிலங்களைக் கேட்டுக்கொண்டதால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 48 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திருத்தப்பட்ட திட்டத்தில், வேளாண் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தருதல், வரைவு மின்சார மசோதா, வேளாண் கழிவுகளை எரித்தால் கிரிமினல் வழக்குத் தொடர்வதைக் கைவிடுதல் போன்ற கோரிக்கைகளில் மத்திய அரசு திருத்தம் ஏதும் செய்யவில்லை. அதே நேரம், லக்கிம்பூர் கலவரத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சர் ஆஷிஸ் மிஸ்ரா தெனியை நீக்க வேண்டும் என்பது குறித்தும் மத்திய அரசு பரீசிலிக்கவில்லை எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x