Last Updated : 09 Dec, 2021 07:57 AM

 

Published : 09 Dec 2021 07:57 AM
Last Updated : 09 Dec 2021 07:57 AM

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சிவசேனா? உ.பி., கோவா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி: சஞ்சய் ராவத் சூசகம்


2022ம் ஆண்டு நடக்கும் உத்தரப்பிரதேசம், கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து சிவசேனா கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று சூசகமாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் சிவசேனா இணையவும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் கோடிட்டு காட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சிவசேனா கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் நேற்று சந்தித்துப் பேசினரார். இந்த சந்திப்புக்குப்பின் சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைக்கும் கூட்டணி இல்லை. 2 அல்லது 3 எதிர்க்கட்சிக் கூட்டணிகள் அமைத்து என்ன செய்யப் போகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை நேற்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சந்தித்து ஒருமணிநேரத்துக்கும் மேலாகப் பேசினார். இந்த சிந்திப்புக்குப்பின் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில் “ பிரியங்கா காந்தியுடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது.

உத்தரப்பிரதேசம், கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் சேர்ந்து பணியாற்றுவது குறித்து ஆலோசித்தோம். தேசிய அரசியல் சூழல் மட்டுமல்லாமல், அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரைவத் தேர்தல் குறித்தும் பேசினோம். ஒருவேளை வாய்ப்பு ஏற்பட்டால், கோவா, உ.பி. தேர்தலில் காங்கிரஸ், சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிடும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே தனியார் சேனல் ஒன்றுக்கு சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில் “ ராகுல் காந்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை ஏற்க வேண்டும், வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன் அவ்வாறு ராகுல் காந்தி வந்தால், சிவசேனா யுபிஏவில் இணையக்கூடும். மகாராஷ்டிராவில் தற்போது சிறியஅளவிலான யுபிஏ அமைத்துள்ளோம்.

அதேபோன்று தேசிய அ ரசியலிலும் இருக்கலாம். அனைவரையும் அழையுங்கள் என்று ராகுல் காந்தியிடம் தெரிவித்தேன். யாரும் தாமாக வந்து சேரமாட்டார்கள். ஒரு திருமணம் நடந்தால்கூட அழைப்பிதழ் கொடுத்தால்தான் மக்கள் வருவார்கள்.

ஆதலால், அழைப்பு விடுக்க வேண்டும், ராகுல் அழைப்பு விடுக்கக் கோரினேன். ராகுல் காந்தி தரப்பில் அழைப்புவிடுத்தால் நாங்கள் பரிசீலிப்போம். இதை உத்தவ் தாக்கரேவிடம் தெரிவிப்போம்” எனத் தெரிவித்தார்.

இதனால் எதிர்காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சிவசேனா கட்சி இணைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x