

ஆஸ்திரேலியாவின் சிட்னியை தலைமையகமாகக் கொண்ட லோவி இன்ஸ்டிடியூட், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை அதிகாரம், வளங்கள், பொருளாதார வளர்ச்சி, ராணுவ திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் பட்டியலிடுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டுக்கான ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் அதிகாரம் மிக்க நாடுகள் பட்டியலில் ஒட்டுமொத்த காரணிகளின் அடிப்படையில் இந்தியா 4-ம் இடம் பிடித்துள்ளது. எனினும் 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2 புள்ளிகள் சரிந்துள்ளது. இந்த பிராந்தியத்தில் இந்த ஆண்டில் புள்ளிகள் சரிந்த 18 நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம்பெற்றுள்ளது.
அதேநேரம் எதிர்கால வளங்கள் அளவீட்டில் இந்தியா சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இதில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இதுபோல, பொருளாதார திறன், ராணுவ திறன், கலாச்சார ஆதிக்கம் ஆகியவற்றில் 4-ம் இடம் பிடித்துள்ளது. ஆனால் வளர்ச்சிக்கான திறன் அளவீட்டில் இந்தியா பின்தங்கி உள்ளது. கரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார மந்தமே இதற்குக் காரணம்.
இந்தப் பட்டியலில் முதல் முறையாக சீனாவை 2-ம் இடத்துக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. ஜப்பான், இந்தியா ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் முறையே 3 முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.