

கேரள முதல்வர் உம்மன் சாண்டியை பெயர் சொல்லி அழைத்து தோழிக்காக உதவி கோரிய 2-ம் வகுப்பு மாணவியை அவர் பாராட்டி நிதியுதவி அளித்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடக்காவு பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி மைய கட்டிடத்தை முதல்வர் சாண்டி அண்மையில் திறந்துவைத்தார்.
விழா மேடைக்கு முதல்வர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்றிருந்த 2-ம் வகுப்பு மாணவி ஷிவானி உரத்த குரலில் உம்மன் சாண்டி என்று கூப்பிட்டார்.
சின்னஞ்சிறு சிறுமி தன்னை பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்ட முதல்வர், அந்த சிறுமியை தனது அருகில் அழைத்தார். அப் போது அந்த சிறுமி, தன்னுடன் படிக்கும் அமல் கிருஷ்ணாவின் தந்தையும், தாயும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட் டுள்ளனர். அவர்களுக்கு வீடு இல்லை, அந்த குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்று கோரினார்.
இதைக் கேட்டு மனம் இரங்கிய உம்மன் சாண்டி, அங்கிருந்த பள்ளி முதல்வர் ரோஸ் மேரியை அழைத்து முழு விவரத்தையும் கேட்டறிந்தார். பின்னர் சிறுமி ஷிவானி கோரியபடி வீடு கட்டுவதற்காக அமல் கிருஷ்ணாவின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.