

இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்தார். அவரது மறைவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், அவரது பின்னணியை நாம் தெரிந்து கொள்வோம்.
40 ஆண்டு கால பணி:
ஜெனரல் பிபின் ராவத் பாதுகாப்புப் படையில் 40 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி என்ற பெருமையைப் பெற்றார். முப்படைத் தளபதி என்பவர் அரசாங்கத்துக்கு ராணுவம் ரீதியாக அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவார். கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் 27வது தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் அந்தப் பதவியை அடைவதற்காக இரண்டு உயர் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தார் என்ற சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் 2019ல் அவர் இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி என்ற பதவியில் அமர்ந்தார். அவரது ஓய்வு வயதை 62ல் இருந்து 65 ஆக அதிகரிக்க, சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
வடகிழக்கில் அமைதி:
வடகிழக்குப் பிராந்தியங்களில் உள்ளூர் கிளர்ச்சிக் குழுக்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. 2015ல் NSCN-K நாகா கிளர்ச்சியாளர்களை ராணுவம் கட்டுப்படுத்தியது பிபின் ராவத்தின் மேற்பார்வையில் தான். 2016 துல்லியத் தாக்குதலில் இவரின் பங்களிப்பு உள்ளது. டெல்லியில் இருந்து கொண்டே ராணுவத் தளபதி பிபின் ராவத் எல்லையில் நடந்த துல்லியத் தாக்குதலை மேற்பார்வை செய்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு கமாண்ட் படைகளில் சவாலான இடங்களில் பணியாற்றியுள்ளார் ராவத். தெற்கு கமாண்ட் ஜெனரல் ஆஃபீஸர், கமாண்டிங் இன் சீஃபாக பணியாற்றியுள்ளார். உரி, ஜம்மு காஷ்மீர், கோர்கா ரைபில்ஸ், சோபூர் ஆகிய பகுதிகளில் பணியாற்றியுள்ளார். ஐ.நா அமைதிப் படையில் இடம்பெற்றிருந்த அவர் பலநாடுகளின் வீரர்கள் கொண்ட படைக்கு தலைமை வகித்து காங்கோ சென்றார். அங்கே அவருக்கு இருமுறை ஃபோர்ஸ் கமாண்டர் கவுவர பட்டம் வழங்கப்பட்டது.
ஜெனரல் பிபின் ராவத் தனது பணிக்காலத்தில் பரம் விசிஷ்ட் சேவா விருது, உத்தம் யுத் சேவா விருது, அதி விஷிஷ்ட் சேவா விருது, விசிஷ்ட் சேவா விருது, யுத் சேவா விருது, சேனா விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஷிம்லாவில் உள்ள செயின்ட் எட்வார்ட்ஸ் பள்ளி, காகட்வாலாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகடமியில் அவர் பயின்றார். 1978ல் கோர்கா ரைபில்ஸின் 5வது படாலியனில் நியமிக்கப்பட்டார். ஸ்வார்ட் ஆஃப் ஹானர் விருது பெற்றார். அமெரிக்காவின் கான்சாஸில் கமாண்ட் ஆஃப் ஜெனரல் ஸ்டாஃப் துறையில் பயிற்சி பெற்றார்.