

இந்தத் துயரத்தில் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது என்று முப்படைத் தளபதி பிபின் ராவத் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக இன்று காலை இரு ஹெலிகாப்டர்கள் சென்றன. அதில் ஒரு ஹெலிகாப்டரில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தரையிறங்குவதற்கு வெறும் 10 கி.மீ. தூரமே இருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிபின் ராவத் மறைவுக்குப் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். விபத்தில் இறந்த மற்றவர்களின் குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா இந்தத் துயரத்தில் ஒன்றுபட்டு நிற்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.