

மத்திய பிரதேசத்தின் பிரபல பன்னா சுரங்கத்தில் சுரங்கத்தில் பழங்குடியின தொழிலாளி ஒருவரிடம் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வைரம் கிடைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் பந்தேல்கண்ட் பகுதியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பன்னா வைரச் சுரங்கத்தில் வேலை செய்து வருகிறார் முலாயம் சிங். பழங்குடியினத் தொழிலாளி முலாயம் சிங் வாழ்க்கை என்பது பெரும் போராட்டம். சொற்ப ஊதியத்தில் சுரங்கத்தில் பணியாற்றி வரும் அவரது மனதில் எப்போதும் தன் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கான செலவுகளை சமாளிப்பது பற்றியே ஓடிக்கொண்டிருக்கும். தற்போது அவரது வாழ்வில் அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டியுள்ளளாள்.
இவர் தனது வேலைக்கு இடையே 13 காரட் வைரத்தைக் கண்டுபிடித்தது குறித்து வைர ஆய்வாளர் அனுபம் சிங் கூறியதாவது:
முலாயம் சிங் கண்டுபிடித்த வைரத்தின் எடை 13.54 காரட், அதன் மதிப்பு குறைந்தது ரூ.60 லட்சம். இந்த விலைமதிப்பற்ற கல் கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில் உள்ள ஆழமற்ற சுரங்கங்களில் இருந்து கிடைத்துள்ளது.
அதிர்ஷ்ட தேவதை முலாயம் சிங்கை மட்டுமல்ல மற்ற தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் புன்னகைக்கத் தொடங்கியுள்ளாள். அதே பன்னா வைரச் சுரங்கத்திலிருந்து வெவ்வேறு எடையுள்ள ஆறு வைரங்களையும் மற்ற தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த ஆறு வைரங்களில் இரண்டு முறையே 6 காரட் மற்றும் 4 காரட் எடையும், மற்றவை முறையே 43, 37 மற்றும் 74 சென்ட் எடையும் கொண்டவை.
இந்த வைரங்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியைத் தாண்டும். ஏலத்தில் உண்மையான விலை தெரியவரும்.
இவ்வாறு அனுபம் சிங் தெரிவித்தார்.
தனது விலைமதிப்பற்ற உடைமை குறித்து மகிழ்ச்சியடைந்த முலாயம் சிங், “இந்த வைரத்தை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை எனது குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவேன்” என்றார்.