

வேலூர் மாவட்டத்தின் ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இரண்டு இடங்களில் ரயில் மேம்பாலங்கள் கட்ட மக்களவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் மக்களவை தொகுதியின் திமுக எம்.பியான கதிர் ஆனந்த் பூஜ்ஜிய நேரத்தில் பேசினார்.
இது குறித்து நாடாளுமன்ற வேலூர் மக்களவையின் திமுக எம்.பியான கதிர் ஆனந்த் பேசியதாவது:
எனது வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட இரண்டு முக்கிய வணிக நகரங்களான ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பெருமக்கள் அந்நியச் செலாவணி மற்றும் நாட்டின் கருவூலத்திற்கு கணிசமான வருவாய் ஈட்டித் தருகிறார்கள்.
ஆனால் வாணியம்பாடி மற்றும் ஆம்பூரின் ரெட்டி தோப்பில் ரயில் மேம்பாலம் கட்டும் பணி பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அலுவலகம் செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபார பெருமக்கள் உட்பட அனைத்து தரப்பு பயணிகளுக்காவும் இந்த இரண்டும் கட்டுவது மிகவும் முக்கியமானவை.
ஆம்பூர் ரெட்டி தோப்பில் இருபுறமும் வசிக்கும் மக்களுக்கும், அதிக எண்ணிக்கையிலான பயணிகளுக்கும் தற்போதுள்ள சுரங்கப் பாதை மிகவும் குறுகி வாகனங்கள் விரைவில் பயணிப்பதில் சிரமம் உள்ளது.
மழைக்காலங்களில் இந்த சுரங்கப் பாதையில் மழைநீர் உடன் சாக்கடை கழிவு நீர் கலந்து தேங்கி நிற்கிறது. எனவே ஆம்பூர் ரெட்டி தோப்பில் ரெயில் மேம்பாலம் கட்டினால் மட்டுமே ஆம்பூர் மக்களின் அவல நிலைக்குத் தீர்வு காண முடியும்.
இதனால், புதிய பெத்லகேம், கம்பிக்கொல்லை, நதிசீலபுரம், மலைமேடு, எம்.வி.சாமி நகர் மற்றும் நாய்க்கேனேரி, பனகத்தேரி ஆகிய மலைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்கள் பயனடைவார்கள்.
அதே போல் வாணியம்பாடி நகரிலும் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிலுவையில் உள்ளது. வாணியம்பாடி தமிழ்நாட்டின் ஒரு பெரிய தொழில் நகரமாகும்.
இங்கே அதிக எண்ணிக்கையிலான தோல் மற்றும் காலணித் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் நுழைபவர்களுக்கு இந்த ரயில் பாதை கடப்பது மட்டுமே அணுகக்கூடிய இடம்.
120க்கும் மேற்பட்ட ரயில்கள் இரு திசைகளிலும் கடந்து செல்வதால், ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படும் நிலை உள்ளது. தெற்கு ரயில்வே ரூ.16 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க முன்மொழிந்துள்ளது.
ஆனால் அது இன்னும் கட்டப்படாமல் உள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகுகின்றனர். எனவே, ரெட்டித்தோப்பு ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இரு பகுதிகளிலும் உடனடியாக மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.
இதன் பலனாக, அனைத்து தரப்பினரின் வாகனப் போக்குவரத்துக்கு வசதியாகவும், பயணிகள் மற்றும் வாகனங்கள் செல்ல ஏதுவாகவும் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.