

அசாம் மாநிலத்தில் உள்ள காமக்யா கோயில் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டக் கோயில்களுக்கு முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் தானமளித்ததாக, அசாமின் ஏஐடியுஎப் எம்எல்ஏவான அமீனுல் இஸ்லாம் கூறியுள்ளார்.
முகலாயப் பேரரசரான அவுரங்கசீப் தனது இஸ்லாம் மதத்தை பரப்புவதில் தீவிரம் காட்டியதாக வரலாற்றுப் பதிவுகளில் குறிப்புகள் உள்ளன. இதற்காக அவர் பல கோயில்களை இடித்ததுடன், மதமாற்றம் செய்ததாகப் புகார்களும் அதில் உண்டு.
தம் கடவுள் கிருஷ்ணரின் பிறந்த இடமாக இந்துக்கள் கருதும் உத்தரப்பிரதேசம் மதுராவிலும் பேரரசர் அவுரங்கசீப் ஒரு கோயிலை இடித்ததாக வரலாறு கூறுகிறது. அப்பதிவில், மதுராவிலிருந்த கிருஷ்ணர் கோயிலை இடித்து அதன் பாதி நிலத்தில் ஷாயி ஈத்கா கியான்வாபி மசூதியை கட்டியுள்ளதாகவும் உள்ளது.
தற்போது இக்கோயிலுக்கானதாக இருந்த நிலத்தை திரும்ப ஒப்படைக்கும்படி இந்துத்துவா அமைப்புகள் போராட்டங்களை துவக்கி உள்ளனர். இச்சூழலில் ஏஐடியுஎப் கட்சியின் எம்எல்ஏவான அமீனுல் இஸ்லாம் எழுதிய ‘ஹோலி அசாம்’ எனும் நூல் வெளியாகி உள்ளது.
இதில் அமினுல் இஸ்லாம், பேரரசர் அவுரங்கசீப் ஆட்சியில் அவரது அரசவை பல கோயில்களுக்கு தானம் அளிக்க உத்தரவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் கொண்ட அந்நூலின் மீது பாஜக ஆளும் அசாம் முதல்வரான டாக்டர்.ஹிமாந்தா பிஸ்வா சர்மா கருத்து கூறியுள்ளார்.
அதில் முதல்வர் பிஸ்வா சர்மா, சுதந்திரத்திற்கு பிறகு தான் இந்தியாவில் மதநல்லிணக்கம் தோன்றியதாகவும் கருத்து தெரிவித்தார். இதை அந்நூலின் ஆசிரியரும் அசாமின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின்(ஏஐடியுஎப்) எம்எல்ஏவான அமீனுல் இஸ்லாம் மறுத்துள்ளார்.
இது குறித்து ஏஐடியுஎப் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான அமீனுல் இஸ்லாம் கூறும்போது,
‘1947 க்கு பிறகு தான் மதநல்லிணக்கம் துவங்கியதாக முதல்வர் கூறுவது தவறானக் கருத்து.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த மதநல்லிணக்கம் நம் நாட்டில் இருந்தது. முகலாய ஆட்சியாளர்கள் காலத்திலும் இருந்ததால் அவர்கள், பல கோயிலுக்காக நிலங்களையும், நிதிகளையும் தானமாக அளித்துள்ளனர்.
இதில் ஒன்றாக இருப்பது தான் அசாமின் கவுகாத்தியிலுள்ள காமக்யா கோயிலாகும். இதற்கு உட்பட 400-க்கும் மேற்பட்டக் கோயில்களுக்கு முகலாயப் பேரரசரான அவுரங்கசீப் தானம் அளித்துள்ளார்.
இந்தியாவை ஆண்ட அனைத்து மதங்களை சேர்ந்த ஆட்சியாளர்களும் மதநல்லிணக்கத்தை பேணிக் காத்தனர். இந்துக்களின் ஆட்சியில் இஸ்லாமிய மக்கள் தங்கள் மதத்தை கடைப்பிடிக்க எந்த தடைகளும் இருந்ததில்லை.
இதேவகையில், முஸ்லிம் ஆட்சியாளர்கள் காலத்தில் இந்துக்களுக்கும் தம் மதநடவடிக்கைகளில் முழுசுதந்திரம் இருந்தது. இந்த வரலாற்று நிகழ்வை நூலில் குறிப்பிட்டதற்காக முதல்வர் கண்டிக்க வேண்டும் எனில், அதை வெளியிட்ட அஸாம் சாகித்ய சபாவினரை கண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.