

அரசு அலுவலகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த திரிணமூல் காங்கிரஸ் மகளிர் பிரிவைச்சேர்ந்த நிர்வாகியின் படம் சமூக வலைதளங்களில் வைரலானதால் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மால்டா மாவட்டத்தில் உள்ள டிஎம்சியின் மகிளா மண்டலின் மூத்த தலைவராக இருப்பவர் மிருணாளினி மண்டல் மைதி. இவர் பழைய மால்டா பஞ்சாயத்து சமிதியின் உள்ளூர் தலைவராக பதவியில் இருக்கிறார்.
நேற்று காலை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த மிருணாளினி மண்டல் மைதி, தனது அதிகாரபூர்வ நாற்காலியில் வந்து அமர்ந்தார், பின்னர், ஒரு கையில் துப்பாக்கியுடன் ஸ்டைலாக செல்பி எடுக்க போஸ் கொடுப்பதை அங்கிருந்தவர்கள் கணநேரத்தில் தங்கள் கேமராக்களில் பதிவு செய்தனர்.
சிறிதுநேரத்தில் அவர்கள் இப்படத்தை வலைதளங்களில் பதிவேற்றம் செய்தவுடன் அலுவலகத்திற்குள் தானியங்கி கைத்துப்பாக்கியை வைத்திருக்கும் படம் வைரலாகி வருகிறது.நேற்று வைரலான நிலையில் மால்டா மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் உண்டாக்கியது.
இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் கோபிந்த சந்திர மண்டல் கூறியதாவது:
''ஆளும் கட்சி மாநிலத்தை வெடிபொருட்களின் கிடங்காக மாற்றிவிட்டது. இதுதான் டிஎம்சியின் கலாச்சாரம். மைதியிடம் தேடுதல்வேட்டை நடத்தினால் போலீஸாருக்கு வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் கிடைக்கும். வேலை பறிபோய் விடுமோ என்ற பயத்தில் போலீசார் எதையும் செய்வதில்லை'' என்று குற்றம்சாட்டினார். .
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள், ''மிருணாளினி மண்டல் மைதி செய்தது மிகவும் தவறான செயல். அதிகாரப்பூர்வ நாற்காலியில் அமர்ந்து துப்பாக்கியுடன் விளையாட முடியாது. இது உண்மையான துப்பாக்கியா அல்லது பொம்மை துப்பாக்கியா என போலீசார் விசாரணை நடத்துவார்கள்.'' என்று தெரிவித்துள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணேந்து நாராயண் சவுத்ரி கூறுகையில், ''புகைப்படத்தைப் பார்க்கும்போது அது ஒரு உண்மையான துப்பாக்கிதான் என்று தெரிகிறது. இதுபோன்ற ஒரு சம்பவத்தால் கட்சியின் இமேஜ் சிதைந்துள்ளது”என்றார்.
அவர் மீது எழுப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பலமுறை பதில்பெற முயற்சித்தும் மைதியை அணுக முடியவில்லை. மைதி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல.
முன்னதாக, அப்பகுதியின் தொகுதி வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் அரசு அதிகாரி ஒருவரை அவரது கணவர் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.