மக்களவையில் 2016-17 பொது பட்ஜெட் தாக்கல்: வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை

மக்களவையில் 2016-17 பொது பட்ஜெட் தாக்கல்: வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை
Updated on
2 min read

ஆதாருக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம், வேளாண்மைக்கு முன்னுரிமை

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016-17-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

எனினும் விவசாயிகள் நலன் சார்ந்த வேளாண் திட்டங்கள், கிராமப்புற மேம்பாட்டுக்கு முக்கியத் துவம் அளிக்கப்பட்டுள்ளது. சமூக நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் வகையில் அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு 3-வது முறையாக அருண் ஜேட்லி நேற்று பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

வருமான வரி விலக்கு

பணவீக்கம் அதிகரித்து வருவதால் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் வரிவிலக்கு உச்சவரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

எனினும் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கான வரிச் சலுகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக அதிகரிக்கப்பட் டுள்ளது.

வாடகை வீட்டில் வசிப்போருக் கான வரிச்சலுகை உச்சவரம்பு ரூ.24,000-ல் இருந்து ரூ.60,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முதல்முறையாக வீடு வாங்கு பவர்களுக்கு ரூ.35 லட்சத்துக்கு உட்பட்ட வீட்டுக் கடன் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் வரிச்சலுகை அளிக்கப் பட்டுள்ளது.

வேளாண்மை திட்டங்கள்

விவசாயிகளின் நலனுக்காக வேளாண் துறைக்கு மட்டும் ரூ.44,485 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நீண்டகால நீர்ப்பாசன திட்டத்துக்காக ரூ.20 ஆயிரம் கோடியில் நிதியம், ரூ.6 ஆயிரம் கோடியில் நிலத்தடி நீர் மேம்பாட்டுத் திட்டம், ரூ.86,500 கோடியில் 99 நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் 2 ஆயிரம் மண்வள, விதை ஆய்வு மையங்கள் திறக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2016-17-ம் நிதியாண்டில் ரூ.9 லட்சம் கோடிக்கு வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. கால்நடை துறை வளர்ச்சிக்காக ரூ.850 கோடியில் 4 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயி களின் வருவாயை இரட்டிப்பாக் கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது,

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு புத்துயிர் ஊட்டும் விதத்தில் அந்தத் திட்டத்துக்கு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2016-17 நிதியாண்டில் 5 லட்சம் குளங்களை தூர்வாரவும் 10 லட்சம் இயற்கை உர மையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பு

நாடு முழுவதும் 10 பொதுத்துறை, 10 தனியார் கல்வி நிறுவனங்கள் உலகத் தரத்துக்கு மேம்படுத்தப்படும். உயர் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக ரூ.1,000 கோடியில் புதிய நிதியம் ஏற்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் புதிதாக 62 நவோதயா வித்யாலயா பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இளம் தொழிலதிபர்களை உரு வாக்க 2,200 கல்லூரிகள், 300 பள்ளிகள், 500 ஐடிஐ கல்வி நிறு வனங்களில் ஆன்லைன் தொழில் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.

தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம் சார்பில் நாடு முழுவதும் 100 முன்மாதிரி வேலைவாய்ப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

வேலைவாய்ப்புகளை பெருக்க ஊழியர்களுக்காக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) சந்தா தொகையை முதல் 3 ஆண்டு களுக்கு அரசே செலுத்த உள்ளது.

அதேநேரம் பி.எப். முதிர்வை திரும்பப் பெறும்போது 60 சதவீத தொகைக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ ஓதுக்கீடு?

இந்த பட்ஜெட்டில் ராணுவத்துக் கான ஒதுக்கீடு குறித்து எவ்வித தகவலும் குறிப்பிடப்படவில்லை. ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்கு நிதியை ஒதுக்காமல் விட்டாலோ, குறைத்து ஒதுக்கி னாலோ முன்னாள் ராணுவ வீரர்கள் மீண்டும் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது என்பதால் ராணுவ ஒதுக்கீட்டை அரசு குறிப்பி டவில்லை என்று கூறப்படுகிறது.

கார்கள், புகையிலை பொருட்கள், தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்டவற்றுக்கு வரி விதிக்கப்பட்டிருப்பதால் அவற்றின் விலை உயரும். அதேநேரம் காலணி தயாரிப்புகள், சூரிய சக்தி விளக் குகள், செட்டாப் பாக்ஸ், பிராட் பேண்ட் மோடம், சிசிடிவி கேமரா ஆகியவற்றுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை குறையும்.

சமூக நலத்திட்டங்கள்

சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் வகையில் அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய சட்டம் இயற்றப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in